
தமிழ்நாடு - தேனி மாவட்டம், தேனி மாவட்டத்தில் ரூ.138 கோடி அபராதம் விதிக்கப்பட்ட குவாரிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும்! முறைகேட்டுக்கு காரணமான கனிமவளத்துறை துணை இயக்குனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை !!!
தேனி மாவட்டம், பெரியகுளம் வருவாய் கோட்டத்தில், ரூ.138 கோடி அபராதம் விதிக்கப்பட்ட குவாரிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
முறைகேட்டுக்கு காரணமான கனிமவளத்துறை துணை இயக்குனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!!
தேனி மாவட்டம் - பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் ஆண்டிப்பட்டி,தேனி,பெரியகுளம் ஆகிய வட்டங்களில் செயல்படும் தனியார், அரசு நிலங்களில் உள்ள குவாரிகளில் மாபெரும் கனிமவளக் கொள்ளை நடப்பதாக 2020-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனி நபர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்,இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம், கனிமவளத்துறை உதவி இயக்குநருக்கு உத்தரவிட்டது.....
அதன்படி, 2021-ல் பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் ஆண்டிபட்டி,தேனி, பெரியகுளம் வட்டங்களில் உள்ள குவாரிகளில் ட்ரோன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.அதில், அரசு நிலத்தில் செயல்பட்ட 17 குவாரிகள், தனியார் நிலங்களில் செயல்பட்ட 22 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள், கிராவல் மண் வெட்டி எடுத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த குவாரிகளில் இருந்து ரூ. 92.56 கோடி மதிப்பிலான மண் 326 கன மீட்டர், கிராவல் 16.15 லட்சம் கன மீட்டர், உடைகல் 17.59 கன மீட்டர் கூடுதலாக வெட்டி கனிமம் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. அதனால், இந்த குவாரிகளை நடத்தி வந்த 58 பேரிடமும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில்,பெரியகுளம் வருவாய்க் கோட்டத்திற்குட்பட்ட 39 குவாரிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட ரூ.92.56 கோடி கனிமத்திற்கான தொகை மற்றும் அதற்கான சீனியரேஜ் கட்டணம் ரூ.15.11 கோடி, அபராதத்தொகை ரூ.30.23 கோடி என மொத்தம் ரூ.138.4 கோடியை 58 குவாரி உரிமையாளர்களும் செலுத்த வேண்டும் என்று பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 138.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அபராதம் விதிக்கப்பட்ட குவாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவது சட்ட விரோதமானது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி , மாவட்ட நிர்வாகம் தனது பணியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.அதன்பின் நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவளத்துறை துணை இயக்குனர் இதுவரை இது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை!.
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் காலம் வரை மேற்படி குவாரிகளை நடத்தக்கூடாது என தேனி கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஏன் தடை செய்யவில்லை. மேல்முறையீட்டு காலம் முடிவதற்குள், மேற்படி குவாரி உரிமையாளர்கள் இதைவிட பல மடங்கு கனிமங்களை வெட்டி கொள்ளையடிப்பதற்க்கான வாய்ப்பை கனிமவளத்துறை துணை இயக்குனரே வழங்குகிறார் ! மேலும் முறைகேடாக வெடி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது !
தேனி மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமோகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் !
மேலும் அபராதம் விதிக்கப்பட்ட அனைத்து குவாரிகளும் இயங்குவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மேலும் லைசென்ஸ் இல்லாத குவாரிகளும் , கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ள குவாரிகளின் பட்டியலில் உள்ளதை அறிகிறோம் ! அவர்கள் எந்த முகாந்திரத்தோடு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள்? லைசென்ஸ் இல்லாத குவாரிகள் கனிம வளங்களை வெட்டி எடுக்கும் வரை தேனி மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனர் என்ன செய்து கொண்டிருந்தார்? அப்படியானால் நடைபெற்ற கனிமவள கொள்ளைக்கும் தேனி மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனருக்கும் தொடர்பு உள்ளதா ?என்றும் விசாரணையை தீவிரப் படுத்த வேண்டும்.
மேலும் போடிநாயக்கனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட தாலுகாக்களிலும் அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள்,லைசன்ஸ் காலம் முடிந்த பிறகும் செயல்படும் குவாரிகள்,மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக கனிம வளங்களை வெட்டி கொள்ளையடிக்கும் குவாரிகள் குறித்து உரிய ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் !மேலும் தேனி மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் முறைகேடான நடைச் சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் , தகவல்கள் வெளியாகின்றன.?அது குறித்தும் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் தேனி மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமோகன் சம்பந்தப்பட்ட வீடு, அலுவலகங்கள்,அவரது உறவினர்கள் வீடு என அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைகளை நடத்த வேண்டும். கிருஷ்ணமோகன் மற்றும் அவரது குடும்பத்தார் , மற்றும் உறவினர்கள் என அனைவரின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பாக தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கையை முன்வைக்கின்றனர்! இவற்றின் மீது மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பார்களா? ...............................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி