கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்
கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைப்பது மற்றும் விஜர்சனம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். காவல் துறை ஆய்வாளர்கள் முத்து (கயத்தாறு), சபாபதி (கோவில்பட்டி மேற்கு), கோவில்பட்டி காவல் துணை கோட்டத்திற்கு உள்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இம்மாதம் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிக விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து, அதனைத் தொடர்ந்து விஜர்சனம் செய்வது தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் கரோனா தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் தற்காலிக விநாயகர் சிலைகளை வைக்கவோ, பொது இடங்களில் விழா கொண்டாடவோ அனுமதி மறுக்கப்படுகிறது என்றும், தற்காலிக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும், பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனி நபர்கள் தங்களது வீடுகளில் 1 முதல் ஒன்றரை அடி வரை உள்ள தற்காலிக விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளலாம். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் அன்று மாலையே தங்களது வீட்டில் உள்ள தொட்டியில் விஜர்சனம் செய்து விட வேண்டும். தற்காலிக விநாயகர் சிலைகளை தனி நபர்கள் மட்டுமே அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்றும், வேறு ஏதேனும் அமைப்புகள் தற்காலிக விநாயகர் சிலையை வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் தகுந்த குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.