logo

கோவில்பட்டியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

கோவில்பட்டியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் தீப்பிடித்து நாசம் -இருவர் காயம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெருவைச் சேர்ந்த பரமசிவம் என்பரவது மகன் மாடசாமி. இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை வள்ளுவர் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் ஒருபுறம் கட்டிடத்தில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மற்றொரு கட்டடத்தில் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த இயந்திரத்தில் தொழிற்சாலையில் சில பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இன்று மாலையில் இயந்திர தீப்பெட்டி தயாரிக்கும் பகுதியில் இருந்து திடீரென தீபிடித்து மளமளவென எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இதில் வள்ளுவர் நகரைச் சேர்ந்த உத்திரபாண்டியன் (60) சிந்தாமணி நகரைச் சேர்ந்த கண்ணன் (55) என்ற இரண்டு தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், தீப்பெட்டி மூலப்பொருள்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. ஆலையின் கட்டிடமும் சேதமடைந்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணன், தாசில்தார் அமுதா, கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த். தொழிற்சாலை ஆய்வாளர் தீபா ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்டனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12
17247 views