கோவில்பட்டி அருகே கட்டிடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் : 5பேர் கைது
கோவில்பட்டி அருகே கட்டிடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் : 5பேர் கைது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபாண்டவர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த தாமோதர பாண்டியன் மகன் கனகராஜ் (38) என்பவரை கடந்த 14ம் தேதி இரவு அவரது வீட்டின் முன்பு வைத்து மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் இதை தடுக்கச் சென்ற கனகராஜின் தாயார் பார்வதி (59) என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பார்வதி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையில் உதவி ஆய்வாளர் நாராயணனசாமி, தலைமைக் காவலர்கள் முருகன், அமல்ராஜ், உலகநாதன், முதல் நிலைக் காவலர்கள் ஆனந்த், மைதீன் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதிலும் மேலபாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்த பூலோகப்பாண்டியன் மகன் பாலகிருஷ்ணன் (25), கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மகேந்திரன் (21), கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த ரத்னவேல் பாண்டியன் மகன் ரஞ்சித்குமார் (25) கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சிவபெருமாள் (25), சண்முகராஜ் மகன் சரவணக்குமார் (21) ஆகியோர் முன்விரோதம் காரணமாக கனகராஜை அரிவாளால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் மேற்படி 5 பேரையும் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி எதிரிகளை விரைந்து கைது செய்த, தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.