திருவள்ளூர் டிப்போவில் தொழிலாளர்கள் அவதி
அதிகாரிகளின் அவமரியாதை பேச்சால் பணியாளர்கள் வேதனை!
திருவள்ளூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீதான அதிகார துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர் டிப்போவில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் மற்றும் பாஸ்கரன் எனப்படும் இரு அதிகாரிகள், அங்கு பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழிலாளர்களை மிகவும் தரக்குறைவாக பேசி மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருவதாக கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் கூறுகையில், “நாங்கள் அரசு போக்குவரத்து சேவையை மக்களுக்காக பகல்-இரவு பாராமல் செய்து வருகிறோம். ஆனால் எங்களை மனிதர்களாக கூட மதிக்காமல், கொத்தடிமைகளைப் போல நடத்துகின்றனர். சிறிய விஷயங்களுக்குக் கூட மிரட்டல், அவதூறு, அவமரியாதை பேச்சு ஆகியவை தொடர்கின்றன” என வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும், பணிச்சுமை, உடல் நலக்குறைவு, குடும்ப சூழ்நிலை போன்றவற்றை எடுத்துரைத்தாலும் அதனை கவனிக்காமல் தொழிலாளர்களை மனரீதியாக அழுத்தம் கொடுத்து வேலை வாங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் பல தொழிலாளர்கள் மனஅழுத்தத்திலும் அச்சத்திலும் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் மனித உரிமைகள் குறித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், சில அதிகாரிகளின் இத்தகைய செயல்கள் அரசு மீது மக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்பது பொதுமக்களுக்கு சேவை செய்யும் முக்கிய அரசுத்துறை அமைப்பாகும். இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளும் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மரியாதையான பணிச்சூழலை உறுதி செய்ய வேண்டும் என்று தொழிலாளர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
“தொழிலாளி அடிமை அல்ல…
அவர்களின் உழைப்பே அரசுப் போக்குவரத்தின் முதுகெலும்பு!” என்ற கோஷமும் தற்போது திருவள்ளூர் டிப்போ தொழிலாளர்களிடையே ஒலிக்கத் தொடங்கியுள்ளது.