கேஸ் சிலிண்டர் புக் பண்றீங்களா? மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மத்திய அரசின் ரூல்ஸ்!
சிலிண்டர் வாடிக்கையாளர்களா நீங்கள்? இனி 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சிலிண்டர் புக்கிங் - மத்திய அரசின் புதிய அதிரடி கட்டுப்பாடுகள்!
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை கடந்த மார்ச் மாதம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் கள்ளச்சந்தை பதுக்கலை தடுக்கும் விதமாக, மத்திய அரசு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சில புதிய கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, மார்ச் 1 அன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை அதிரடியாக உயர்த்தின.
சிலிண்டர் விலை!
இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 60 உயர்த்தப்பட்டு, தற்போது சென்னையில் ரூ. 928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 114 உயர்த்தப்பட்டு, ரூ. 2,043-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களையும், சிறு உணவகங்கள் நடத்துவோரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதிய 25 நாட்கள் கட்டுப்பாடு
விலை உயர்வு ஒருபுறம் இருக்க, மறுபுறம் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவியதால், வசதி படைத்த பலர் தேவைக்கு அதிகமாகச் சிலிண்டர்களை முன்பதிவு செய்து இருப்பு வைக்க தொடங்கினர். இதனால், உண்மையான தேவையுடைய ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இந்த பதுக்கலைத் தடுக்கும் நோக்கத்தோடு, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் முன்னெடுப்பு விநியோகக் கொள்கை என்ற புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, இனி ஒரு வாடிக்கையாளர் கேஸ் சிலிண்டரை பெற்ற பிறகு, அடுத்த சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த இடைவெளி 15 முதல் 21 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
25 நாட்களுக்கு முன்பாகவே எவரேனும் சிலிண்டரை புக் செய்ய முயன்றால், அந்த முன்பதிவு தானாகவே ரத்து செய்யப்படும். எரிவாயு தட்டுப்பாட்டை போக்கவும், கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவுமே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை
வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை பெருமளவு உயர்ந்திருப்பதால், சில சிறு உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளை நடத்துபவர்கள், விலை குறைவான வீட்டு உபயோக சிலிண்டர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தடுக்கும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியான தேவைகளுக்கு பயன்படுத்தினால் அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கேஸ் ஏஜென்சிகள், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புகார் அளிக்க உதவி எண்கள்
சிலிண்டர்களை முன்பதிவு செய்தும் நீண்ட நாட்களாக டெலிவரி செய்யப்படவில்லை என்றாலோ, முன்பதிவு தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டாலோ அல்லது கேஸ் டெலிவரி ஊழியர்கள் கூடுதலாக பணம் கேட்டாலோ, வாடிக்கையாளர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Grievance Portal மூலமாகவும் Cash Memo Not Given, Delay in Refill Supply போன்ற பிரிவுகளின் கீழ் நேரடியாக புகார்களை பதிவு செய்யலாம். மத்திய அரசின் இந்த புதிய 25 நாள் கட்டுப்பாட்டு விதிமுறை, கேஸ் சிலிண்டர்கள் சீராகவும் தடையின்றியும் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க
இண்டேன் கேஸ் (Indane Gas): 1800-2333-555
பாரத் கேஸ் (Bharat Gas): 1800-22-4344
ஹெச்பி கேஸ் (HP Gas): 1800-233-3555
தமிழ்நாடு அரசின் மாநில நுகர்வோர் உதவி எண்: 1967 அல்லது 044-28592828 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.