சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான குளுகுளு ஏசி ஆட்டோ: 'வில்லேஜ் விஞ்ஞானி' பாஸ் நீங்க
குடிநீர் வசதியுடன் கூடிய இயற்கை ஏசி ஆட்டோவில் 77 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கட்டணத்தில் பயணிக்கலாம் என்று ஆட்டோ சுப்ரமணி தெரிவித்துள்ளார்.
இயற்கை ஏசி ஆட்டோ
சேலம்: சேலம் மாநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இயற்கை ஏசி வசதிகளைக் கொண்ட ஆட்டோ வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வாட்டி வதைத்து வரும் கடும் வெயிலால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
வெப்பத்தை தணிப்பதற்காக இளநீர், தர்பூசணி, பழச்சாறு, நீர்மோர் போன்றவற்றை பருகி சேலத்து மக்கள் ஆசுவாசம் அடைந்து வருகிறார்கள். மேலும், கடும் வெயில் காரணமாக பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேலம் சின்ன கடைவீதி, தற்போது ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், சேலம் மாநகரம், குரங்குசாவடியை அடுத்துள்ள ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த 74 வயதான சுப்பிரமணி ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது என்பதால், இவரது ஆட்டோவின் கூரையில் சோளத் தட்டு மற்றும் வைக்கோல் கட்டி அதன் மீது குளிர்ந்த தண்ணீரை தெளித்து, வலம் வருகிறார். இதனால் அவரது ஆட்டோவுக்குள் நுழைந்தாலே குளுகுளுவென ஏசி போட்டதை போன்ற உணர்வு ஏற்படுகிறது.
அதேபோல் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தாகத்தைத் தீர்க்கும் விதமாக சிறிய தண்ணீர் டேங்க் மற்றும் ஆட்டோவின் ஒரு பக்கத்தில் சிறிய டேப் அமைத்து குடிநீர் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இது மட்டுமின்றி தனது ஆட்டோவில் மொபைல் சார்ஜிங் பாயிண்ட், ஃபேன் உள்ளிட்டவற்றை ஆட்டோவில் இணைத்துள்ளார். இவரது முயற்சி சேலம் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணி, "இயற்கை ஏசி ஆட்டோ என்று எனது ஆட்டோவிற்கு பெயர் வைத்துள்ளேன். எத்தனையோ ஆட்டோக்களில் சென்றிருக்கிறோம். இந்த ஆட்டோவில் சென்று பார்க்கலாம் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனது ஆட்டோவில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களுக்காக குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.
இதெற்கென்று அதிக கட்டணம் வசூலிப்பது கிடையாது. வாடிக்கையாளர்கள் கொடுப்பதைப் பெற்றுக் கொள்வேன். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை ஏசி ஆட்டோவைத் தொடங்கினேன். காரில் செல்பவர்கள் கூட என்னை பார்த்து சூப்பர் என்று சொல்வார்கள். எனது ஆட்டோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 77 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனது ஆட்டோவில் பாதிக் கட்டணத்தில் பயணிக்கலாம். பிரசவத்திற்கு இலவசம்" என்று தெரிவித்துள்ளார்.