தமிழ்நாட்டில் 85% வாக்குப்பதிவு..! 74 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை..!
தமிழ்நாட்டில் 85% வாக்குப்பதிவு..! 74 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை..!
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் அட்டவணை கடந்த மாதம் (மார்ச்) 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.. மேற்குவங்கத்தை பொறுத்த வரை 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.. நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.. 2-ம் கட்ட கட்ட வாக்குப்பதிவு வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே தேர்தல் முடிவடைந்த கேரளா (140 தொகுதிகள்), அசாம் (126 தொகுதிகள்) மற்றும் புதுச்சேரி (30 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கேரளாவில் 74.57%, அசாமில் 82.04%, புதுச்சேரியில் 81.88% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் 2026 தேர்தலில், இந்த மூன்று மாநிலங்களிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. அதாவது, கேரளாவில் 84.42%, அசாமில் 84.42% மற்றும் புதுச்சேரியில் 91.23% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவும் குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. மாநிலத்தில் இதுவரை நடைபெற்ற 74 ஆண்டுகால சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில், சுமார் 85% வாக்குப்பதிவு பதிவாகி புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது. அதேபோல், மேற்கு வங்காளத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 91.78% வாக்குகள் பதிவாகியுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இதுவரை இல்லாத அளவில் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகி, கடந்த 74 ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.. அதே நேரத்தில், மேற்கு வங்காளத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 91.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
பொதுவாக, ஒரு தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால், அது ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அதிகமாக உள்ளது அல்லது ஆளுங்கட்சிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படும். எனினும், இம்முறை அதிக வாக்குப்பதிவுக்கு வேறு காரணமும் உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் போது, இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அதேபோல், ஒரே நபரின் பெயர் இருமுறை இடம்பெற்றிருந்த பதிவுகளும் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன. இதன் விளைவாக, ஒவ்வொரு மாநிலத்திலும் தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் லட்சக்கணக்கில் நீக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் இந்த சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 ஆக இருந்தது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது, அது 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 ஆக குறைந்தது. இதன் மூலம், 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
மேலும், தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 16 சட்டமன்றத் தேர்தல்களில் அதிகபட்ச வாக்குப்பதிவு 2011ஆம் ஆண்டு 78.2% ஆக இருந்தது. அதேசமயம், மிகக் குறைந்த வாக்குப்பதிவு 1957ஆம் ஆண்டு 46.84% ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இம்முறை சுமார் 85% வாக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டிருப்பது வரலாற்றுச் சாதனையாக கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர்.. இதில் இன்று 4,83,29,573 வாக்குகள் பதிவானது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் 4.62 கோடி வாக்குகள் பதிவானது.. கடந்த சட்டமன்ற தேர்தலை விட சுமார் 20 லட்சம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழ்நாட்டில் வரலாறு காணாத இந்த வாக்குப்பதிவுக்கு SIR பணிகள் முக்கிய காரணமாக இருந்தாலும், முதல் முறையாக வாக்களிக்க வந்த இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றதும் இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.