“அச்சுறுத்தலா? அரசு நிலம் பெயரில் மக்கள் வெளியேற்றம் – துரைப்பாக்கத்தில் பதற்றம்!”
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட துரைப்பாக்கம் 193வது வார்டில் உள்ள அறிஞர் அண்ணா நகர் 8வது தெரு மற்றும் பல்லவன் தெரு பகுதிகளில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
அப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் டி.சி. கோவிந்தசாமி மற்றும் அவரது ஆதரவாளர் காமேஷ் உள்ளிட்டோர், அரசு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறி, அங்கு வசித்து வரும் பொதுமக்களை வீடுகளை காலி செய்யுமாறு அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இடையே அதிருப்தியும் அச்சமும் நிலவுகிறது.
மேலும், அந்த பகுதியில் இதுவரை குடிநீர் வசதி, சாலை வசதி, வடிகால் (டிரைனேஜ்) வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் நிலையில், வீடுகளை காலி செய்யுமாறு கூறப்படுவது அநியாயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை எதிர்த்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பு பலகைகள் அமைத்துள்ளனர். அந்த பலகைகளில், “எங்களுக்கு உதவாத எந்தக் கட்சியும் ஓட்டு கேட்க வர வேண்டாம்”, “ஓட்டு போட விருப்பமில்லை”, “நோட்டாவில் தான் வாக்களிப்போம்” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.