logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ரூ.10,000 நிவாரணம் வழங்க ஸ்விக்கி, சொமாட்டோ டெலிவரி ஊழியர் சங்​கம் கோரிக்கை

வணிக ரீதியி​லான சமையல் காஸ் தட்​டுப்​பாட்டால் உணவகங்கள் முடங்கியதால், பாதிக்​கப்​பட்ட டெலிவரி ஊழியர்​களுக்கு ரூ.10,000 நிவாரண நிதி வழங்க வேண்​டும் என இந்​திய கிக் மற்​றும் பிளாட்​பார்ம் தொழிலா​ளர்​கள் சங்​கம் (GIPSWU) மத்​திய அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக அந்​தச் சங்​கம் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்கு ஆசி​யா​வில் நில​வும் போர்ப் பதற்​றத்​தால், உணவகங்​கள், தாபாக்​கள் மற்​றும் ‘கிளவுட் கிச்​சன்​’களுக்​குத் தேவை​யான வணிக ரீதியி​லான காஸ் சிலிண்​டர்​களுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், உணவகங்​கள் தங்​கள் செயல்​பாடு​களை 50 முதல் 80 சதவீதம் வரை குறைத்​துள்​ளன.

இதன் நேரடிப் பாதிப்பாக, ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற செயலிகள் வாயிலாக உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு வரும் ஆர்டர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. நாளொன்றுக்கு 30 டெலிவரிகள் செய்து வந்த ஒரு தொழிலாளிக்கு, தற்போது 5 முதல் 10 ஆர்டர்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் சுமார் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலையான ஊதியம், சமூகப் பாதுகாப்பு இல்லாத இந்தத் தொழிலாளர்கள், வருமானமின்றித் தவிக்கின்றனர். எங்கள் உறுப்பினர்கள் உணவின்றி வாடுகின்றனர்; பல குடும்பங்கள் ஒருவேளை உணவைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி மற்றும் அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழலில் தொழிலாளர்கள் உள்ளனர்.

மேலும், ஆர்டர்கள் குறைந்ததைக் காரணம் காட்டி, நிறுவனங்கள் தொழிலாளர்களின் ‘ஐடி’களை (ID) முடக்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொழிலாளர்களைக் கடன் சுமையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் தள்ளியுள்ளது.

இந்த மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலையிட வேண்டும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் உடனடியாக ரூ.10,000 நிவாரண நிதி வழங்க வேண்டும். உணவகங்களுக்குத் தடையில்லா காஸ் விநியோகத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்குத் தொழிலாளர்களின் ‘ஐடி’களை முடக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2
503 views

Comment