logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கிரெடிட் கார்டு விதிமுறைகளில் ஆர்பிஐ அதிரடி! மறைமுக வட்டி, அபராதங்களுக்கு செக்!

பலரும் வங்கிகள் அளிக்கும் கிரெடிட் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தி வந்தாலும் அவற்றில் இருக்கும் சில குறைபாடுகளால், சிலர் அதனை வாங்கவே தயக்கம் காட்டுகிறார்கள்.

அப்படியே கிரெடிட் கார்டு வாங்கி அதில் பெரிய தொகையை செலவழித்துவிட்டு, திரும்ப செலுத்த முடியாமல் சிக்கிக் கொண்டால் அவ்வளவுதான். ஒருவாறு சமாளித்து பணத்தைக் கட்டி அந்த கிரெடிட் கார்டை ரத்து செய்ய நினைத்தால் கனவிலும் நடக்காது என்பது போல வங்கிகள் நடந்து கொள்ளும்.

ஆனால், இந்த தொல்லைகள் இனி இல்லை என்பது போல, ஆர்பிஐ புதிய வழிமுறைகளை விதித்துள்ளது.

கட்டண விதிப்பில் வெளிப்படைத்தன்மை, வட்டி கணக்கீட்டில் நேரடித்தன்மை, தாமதக் கட்டணம், கிரெடிட் கார்டின் அதிகபட்சக் கடன் அளவை தீர்மானிப்பது, கார்டை ரத்து செய்ய கால அளவு நிர்ணயிப்பது போன்றவற்றுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஏன் இந்த விதிமுறைகள்? அண்மைக்காலமாக கிரெடிட் கார்டு வழங்கும் நிதி நிறுவனங்கள், கிரெடிட் அட்டையை அதிகாரப்பூர்வமில்லாமல் ஆக்டிவ் செய்வது, கிரெடிட் தொகையை அதிகரிப்பது, மறைமுக வட்டி விதிப்பு, கார்டை ரத்து செய்வதற்கான காலத்தை நீட்டிப்பது, பணத்தை திரும்ப செலுத்துவதில் தாமதம் போன்றவை குறித்து புகார்கள் அதிகரித்து வந்த நிலையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ புதிய விதிமுறைகளின்படி.. கிரெடிட் கார்டு ஆக்டிவேஷன்: முன்பு தானாகவே ஆக்டிவ் ஆகும் - இனி உரிய அனுமதி பெற்றே ஆக்டிவ் செய்யப்படும்.

கடன் உச்சவரம்பு: கிரெடிட் கார்டு தொகை உச்ச வரம்பு நிதி நிறுவனமே அதிகரிப்பது - வாடிக்கையாளரின் அனுமதி பெற வேண்டும்

தாமதக் கட்டணம்: மறைமுகக் கட்டணங்கள் - உரிய கட்டணங்கள் மட்டும், வெளிப்படையாக விதிக்கப்பட வேண்டும்.

கட்டண வசூல்: மறைமுக, கூட்டு வட்டி விதிப்பு முறை - தெளிவான, வெளிப்படையான கட்டண அறிக்கை

கிரெடிட் கார்டு ரத்து: தாமதம் செய்வது வாடிக்கை - இனி குறிப்பட்ட கால அவகாசத்துக்குள் ரத்து செய்ய வேண்டும். (பயன்பாட்டில் இல்லாத கிரெடிட் கார்டுகள் கோரிக்கை வந்த 30 நாள்களுக்குள் ரத்து செய்யப்பட வேண்டும்)

வட்டி விகிதம் கணக்கீடு: நியாயமற்ற முறையில் வட்டி விகிதக் கணக்கீடு கூடாது, எதற்கு, எவ்வளவு கட்டணம் என்பதை தெளிவாக கட்டண அறிக்கையில் தெளிவுபடுத்த வேண்டும். ஆண்டு சதவிகித கட்டணத்தை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில் கொடுக்க வேண்டும்.

தாமதக் கட்டணத்துக்கான அபராதம்: மொத்தத் தொகையில் பகுதியளவு செலுத்தியிருப்பின், செலுத்தாத தொகைக்குத்தான் தாமதக் கட்டணம் வசூலிக்க வேண்டும், செலுத்தாத தொகைக்கும் கூடுதலாக அபராதம் வசூலிக்கக் கூடாது. கடன் தொகையை திரும்ப செலுத்தும் தேதியை சரியாக தெரிவிக்க வேண்டும். தவறினால் செலுத்த வேண்டிய அபராதத் தொகையையும் வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

கிரெடிட் உச்சவரம்பு தொகை: கிரெடிட் கார்டின் பயன்பாட்டு உச்சவரம்பு தொகையை கூட்டுவதற்கு முன் வாடிக்கையாளரின் ஒப்புதலைப் பெற வேண்டும், எழுத்து வடிவில் வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர் பதில் அளிக்காவிட்டால், மௌனம் சம்மதம் என எடுத்துக் கொள்ளக் கூடாது.

கிரெடிட் கார்டை ரத்து செய்தால்: கிரெடிட் கார்டை ரத்து செய்து, பணத்தைத் திரும்பப் பெற கால தாமதம் ஆவது வழக்கம். அதனைத் தவிர்க்க ஆர்பிஐ பிறப்பித்த விதிமுறையில், வாடிக்கையாளரிடமிருந்து கிரெடிட் கார்டை ரத்து செய்ய கோரிக்கை வந்ததும், உரிய காலத்துக்குள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். ஆண்டுக் கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும். தாமதம் ஆனால் அபராதத்தை கிரெடி கார்டு நிறுவனங்கள் செலுத்த வேண்டிவரும்.

இனி, கிரெடிட் கார்டு வைத்திருப்போர் என்ன செய்ய வேண்டும்?

கட்டண அறிக்கைகளை முறையாக சரிபார்க்கவும்.

தவணை தேதியை நினைவில் வைத்துக்கொண்டு சரியாக தொகையை செலுத்தவும். அபராதத்தைத் தவிர்க்கவும்.

கிரெடிட் கார்டு அட்டையின் பயன்பாட்டு உச்சவரம்பு தொகையில் 30 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தவும்.

பயன்படுத்தாத கிரெடிட் கார்டுகளை ரத்து செய்துவிடவும்.

0
26 views

Comment