logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

சைபர் குற்றங்களைத் தடுக்கும் சைபர் செக்யூரிட்டி படிப்புகள்!

கணினி வழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் வகையிலான புதிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு உலகம் முழுவதும் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதை அடிப்படையாகக் கொண்டு, இணையவழி பணம் திருட்டு, தகவல் திருட்டு, தகவல்களை அழிப்பதைத் தடுப்பது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் வகையில் சைபர் செக்யூரிட்டி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

டிப்ளமோ முதல் பிஎஸ்சி, பிடெக் என பல்வேறு பிரிவுகளிலும் சைபர் செக்யூரிட்டி படிப்புகள் வந்துவிட்டன. பிளஸ் 2-வில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம்.

சைபர் குற்றங்கள், இந்திய சைபர் தடுப்புச் சட்டங்கள், உலகளாவிய சைபர் குற்றங்கள், தீர்வுகள், கணிவழி குற்றங்களை ஆய்வறிந்து தடய அறிவியல், தகவல் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பாடத்திட்டத்தில் கற்பிக்கப்படுகிறது. இதுதவிர செயல்முறைக் கல்வியும் இணைக்கப்பட்டுள்ளது.

சைபர் செக்யூரிட்டி முடித்தவர்களுக்கு சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

வங்கிகள், நிதித் துறை, தகவல் பாதுகாப்புத் துறை, தரவு பாதுகாப்பு நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், மருத்துவம், காவல் துறை, சைபர் தடய அறிவியல் துறை, தகவல் ஆடிட்டிங் துறை உள்பட பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளன.

பெட்டிக் கடையிலும் இணையவழி பணபரிமாற்றம் வந்துவிட்டது. அனைத்தும் எண்மமயமாகி வரும் சூழலில் நமது தகவல்களை பாதுகாப்பாக பரிமாறிக் கொள்வதற்கும், பாதுகாப்பான பரிவர்த்தனைக்கும் பிளாக் செயின் தொழில்நுட்பம் உதவுகிறது. இதை டிஜிட்டல் சேமிப்பகம் என்று சொல்லலாம். வங்கிச் செயல்பாடுகளில் இத் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இத் தொழில்நுட்பத்தில் எண்மமயமாக்கப்பட்ட ஒரு லெட்ஜரில் உள்ள ஒவ்வொரு பரிவர்த்தனையும் உரிமையாளரின் டிஜிட்டல் கையொப்பத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. இதற்காக நமது தகவல்கள் சங்கிலித் தொடர் போல ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது ஹேக் செய்வது அல்லது பிற தீங்கிழைக்கும் மென்பொருள்களால் முடக்குவது, சம்பந்தமில்லாத நபர்கள் உள்புகுந்து கையாளுவது போன்றவை சாத்தியமற்றவையாகின்றன.

பிளாக்செயின் குறித்த சான்றிதழ் படிப்பு உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் ஐஐடியில் உள்ளது. வேலூர் விஐடி, தஞ்சாவூர் சாஸ்த்ரா, சென்னை எஸ்ஆர்எம், சத்யபாமா பல்கலைக்கழகங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் பிளாக்செயின் தொழில்நுட்பப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. பிஎஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளிலும் பிளாக்செயின் தொழில்நுட்பம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.

சென்னை ஐஐடி, ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் இன்டிடியூட் ஆஃப் பிளாக்செயின் டெக்னாலஜி, புணே இந்தியன் பிளாக்செயின் இன்ஸ்டிடியூட், திருவனந்தபுரம் பிளாக்செயின் அகாதெமி உள்ளிட்ட பல்வேறு அரசுசார் கல்வி நிறுவனங்களிலும் சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள தனியார் கல்லூரிகள், தனிப்பட்ட தொழில்நுட்பக் கல்வி மையங்களிலும் நேரடியாகவும் இணையவழியிலும் பிளாக்செயின் தொழில்நுட்பக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

பிளஸ் 2 பாடத்தில் கணிதம், கணினி அறிவியல் பாடம் தேர்வு செய்து படித்தவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து பிளாக்செயின் தொழில்நுட்பம் பயிலலாம்.

0
57 views

Comment