logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னையில் காஸ் ஏஜென்சிகளை முற்றுகையிட்ட மக்கள்

ரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் நடத்​தும் போரால், காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் உள்ள காஸ் ஏஜென்சி அலு​வல​கங்​களை காஸ் சிலிண்டர் கேட்டு பொது​மக்​கள் நேற்று முற்​றுகை​யிட்​டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்​ரேல் நாடு​கள் நடத்​தி வரும் தீவிர தாக்​குதல் காரணமாக,ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடியது. இதனால், இந்​தியா உள்பட பல்​வேறு நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் தடைப்​பட்​டுள்​ளது.

இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எண்ணெய் நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் பல இடங்களில் உணவகங்கள், தேநீர் கடைகள் மூடப்பட்டன. சில உணவகங்களில், வெரைட்டி ரைஸை குறைத்து, ஒரு சில உணவுகள் மட்டும் வழங்கப்படுகின்றன

இதற்கிடையில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் கேட்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் ஏஜென்சி அலுவலங்களை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து ஒரு வாரம் கடந்தும் வரவில்லை என்றும், சிலிண்டர் பதிவு செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்து, தகராறில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, ஏஜென்சி நிர்வாகி கூறுகையில், "காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பீதியால், ஒரு நேரத்தில் பலர் பதிவு செய்ய முயல்கின்றனர். இது தோல்வி அடைந்ததால், அலுவலத்தை முற்றுகையிடுகின்றனர்.

ஒரு சிலிண்டர் வழங்கி, அடுத்த சிலிண்டரை 25 நாள்களுக்கு பிறகு வழங்கப்படும். எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன" என்றார்.

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் கோடம்பாக்கம், வடபழனி உள்பட பல்வேறு இடங்களில் ஆட்டோ உள்பட சிறிய ரக வாகனங்களுக்கு காஸ் நிரப்பும் மையங்கள் மூடப்பட்டன. சில இடங்களில் உள்ள காஸ் நிரப்பும் மையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அகில இந்திய எல்பிஜி சங்க இணை செயலாளர் வசந்த் கூறியதாவது: வீட்டு உபயோகத்துக்கான காஸ் சிலிண்டர் வழக்கம் போல் விநியோகம் செய்கிறோம். வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் கடந்த 9-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு அளவுடன் விநியோகம் செய்யப்படுகிறது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் இருப்பு இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த கப்பல் மார்ச் 25-ம் தேதி வருகிறது. அதன்பிறகு, இப்பிரச்சினை ஓரளவு சீராகும் என எதிர்பார்க்கிறோம்.

காஸ் சிலிண்டர் 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை 45 முதல் 65 சதவீதம் வரை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, இல்லத்தரசிகளின் கவனம் மின்சார அடுப்புகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் மின்சார அடுப்புகளுக்கு மவுசு கூடி, அதை வாங்குவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த திடீர் தேவையால், கடைகளிலும் மின்சார அடுப்புகளை பலரும் வாங்கி வருகின்றனர்.

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை,புறநகர் பகுதிகளில் உள்ள சில தனியார் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1
0 views

Comment