வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை; தேதி அறிவிப்பு!
வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயில் சேவை தொடங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களால் நீண்ட வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை ஒருவழியாக மார்ச் 10 அன்று தொடங்கும் என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. கடந்த 2008 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 17 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், நீதிமன்றத் தடை என பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகிக்கொண்டே இருந்தது.
இந்த நிலையில், மார்ச் 5 ஆம் தேதியில் 5 கி.மீ. தொலைவு கொண்ட இந்த ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மேலும், இந்த சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வரும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், தென்சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களிலிருந்து மக்கள் விடுபடுவர்.
ஏற்கெனவே, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.