logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ஈரான் போர் தாக்கம்: இந்தியாவில் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு

இஸ்​ரேல், ஈரான் போரால் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக இந்​திய அரிசி ஏற்​றும​தி​யாளர்​கள் கூட்டமைப்பு (ஐஆர்​இஎப்), வேளாண் மற்​றும் பதப்​படுத்​தப்​பட்ட உணவுப் பொருட்​கள் ஏற்​றுமதி மேம்​பாட்டு ஆணையத்​திடம் (ஏபிஇடிஏ) சமர்ப்​பித்​துள்ள கோரிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது:

இஸ்​ரேல், ஈரான் இடையி​லான போர் காரண​மாக, மத்​திய கிழக்கு நாடு​களுக்​கான கப்​பல் போக்​கு​வரத்து ரத்து செய்யப்​பட்​டுள்​ள​தால், துறை​முகங்​களில் 2 லட்​சம் மற்றும் நடு​ வழி​யில் 2 லட்​சம் என மொத்​தம் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டு பிரீமியம் மற்றும் போர்க்கால கூடுதல் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால் சர்வதேச சரக்கு போக்குவரத்து கட்டணம் 15-20% வரை அதிகரித்துள்ளது. மேலும் கப்பல் எரிபொருள் விலை ஒரு டன்னுக்கு 520 டாலரிலிருந்து 580 டாலராக உயர்ந்துள்ளது.

இந்த போக்குவரத்து இடையூறுகளால் உள்நாட்டிலும் கடந்த 72 மணி நேரத்தில் பாசுமதி அரிசியின் விலை 7-10% வரை சரிந்துள்ளது. இது ஏற்றுமதியாளர்களின் நடைமுறை மூலதனத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய கோரிக்கைகள் போர் பதற்றம் காரணமாக கப்பல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் துறைமுகங்களில் தேங்கும் சரக்குகளுக்கான சேமிப்பு மற்றும் தாமதக் கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பாதியில் நிற்கும் சரக்குகளைத் திருப்பி அனுப்ப அல்லது வேறு இடத்துக்கு மாற்ற சுங்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் உரிய ஆவண உதவிகளை வழங்க வேண்டும். இந்த நெருக்கடியை ஒரு ‘தவிர்க்க முடியாத சூழலாக’ அறிவிக்க வேண்டும். இதன் மூலம் ஒப்பந்தங்களை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதங்களைத் தவிர்க்க முடியும். கரோனா தொற்று காலக்கட்டத்தில் வழங்கப்பட்டது போன்ற கூடுதல் கடன் வசதிகள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை வங்கிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஆர்இஎப் துணைத் தலைவர் தேவ் கார்க் கூறும்போது, “எரிபொருள், காப்பீட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை ஏற்றுமதியாளர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இந்தியாவின் ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பாதுகாக்க அரசு உரிய காலக்கெடுவுக்குள் நிவாரணம் அறிவிக்க வேண்டும்” என்றார்.

0
0 views

Comment