logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கோவையில் காண்டாமிருகம் வாழ்ந்ததா? தொல்லியல் ஆய்வில் கிடைத்த ஆதாரம்

கோவைக்கு அருகிலுள்ள மோளப்பாளையம் என்ற கிராமத்தில் நடந்து வரும் தொல்லியல் ஆய்வில் புதிய கற்காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறும் ஆய்வாளர்கள், இதில் கிடைத்துள்ள விலங்கு ஒன்றின் எலும்பு காண்டாமிருகத்தினுடையது என்று கூறுகின்றனர்.

இந்த கருத்தில் முரண்படும் காட்டுயிர் ஆய்வாளர்கள், சதுப்பு நிலங்களில் மட்டுமே வாழக்கூடிய காண்டாமிருகங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்ததில்லை என்றும், அதனால் அந்த எலும்பை மரபியல் சோதனைக்கு உட்படுத்தினால் மட்டுமே (DNA TEST) அது காண்டாமிருகத்தின் எலும்பு என்று உறுதியாக சொல்ல முடியுமென்று கூறுகின்றனர்.

ஆனால் உருவவியல் (MORPHOLOGY) அடிப்படையில் இந்தியாவின் தலைசிறந்த விலங்கியல் தொல்லியல் ஆய்வாளர்களால் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியை தொகுத்துள்ள தொல்லியல் பேராசிரியர் செல்வகுமார் தெரிவித்தார்.

கோவை அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள மோளப்பாளையம் என்ற கிராமத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தொல்லியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

அங்கே 3 மனித எலும்புக்கூடுகளும், அதிகமான அளவில் விலங்கு எலும்புகளும், கடல் கிளிஞ்சல், அம்மிக்கற்கள், அரவைக் கற்கள், கல் உருண்டைகள், தானிய விதைகள், கற்கோடாரிகள், புதியகற்காலப் பானைகள், கடற்சங்கில் செய்யப்பட்ட மணிகள், சேமிப்புக் குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்கிறது, மோளப்பாளையம் அகழாய்வின் அறிக்கை.

இங்கு கிடைத்த கற்கோடாரிகள் தற்போது கோவையிலுள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வின் முதற்கட்ட அறிக்கை, சமீபத்தில் மதுரையில் நடந்த கருத்தரங்கில் (Symposium) வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்தான், 3600 ஆண்டுகளுக்கு முன் மக்கள் அங்கே வாழ்ந்ததற்கான சான்று கிடைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்த இடத்தில் மெருகேற்றப்பட்ட கற்கோடாரிகள், பானை ஓடு, அரவைக்கல் என சமதளங்களில் கிடைத்த சில பொருட்களை வைத்தே அந்த இடத்தைத் தொல்லியல் ஆய்வுக்குத் தேர்வு செய்ததாகச் சொல்கிறார் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தி வரும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் தலைவர் வீ.செல்வகுமார்.
மொத்தம் 13 பேர் ஆய்வுகளை மேற்கொண்டு எழுதியுள்ள இந்த அகழாய்வை இவர்தான் தொகுத்துள்ளார். 2021 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும், இங்கேயிருந்து 47 ஆயிரம் எலும்புகள் சேகரிக்கப்பட்டதில் 4 விதமான காட்டு விலங்குகளின் எலும்புகளும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

செய்தி :: பிபிசி தமிழ் இணைய தள பதிவு

0
224 views

Comment