ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?
ஹரியாணா மாநிலம் சண்டிகரில் உள்ள ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ. 590 கோடி பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
ஹரியாணா அரசுத் துறை சார்ந்த கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றங்களைச் செய்திருப்பதை வங்கி கண்டறிந்ததைத் தொடர்ந்து முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று பங்குச்சந்தையில் ஐடிஎஃப்சி வங்கியின் பங்குகள் சுமார் 20% வரை சரிந்தது. ஹரியாணா அரசுத் துறை தரப்பில் தனது கணக்கில் உள்ள பணத்தை வேறு வங்கிக்கு மாற்றக்கோரியபோது, வங்கியின் கணக்கு புத்தகத்தில் இருந்த இருப்புக்கும், அரசு துறையின் ஆவணங்களில் இருந்த இருப்புக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பது தெரியவந்தது. இந்த முறைகேட்டைத் தொடர்ந்து, ஐடிஎஃப்சி வங்கி மற்றும் ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியுடன் எவ்வித அரசு பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளக் கூடாது என ஹரியாணா நிதித்துறை தடை விதித்துள்ளது. இந்த மோசடியில் தொடர்புடையதாகக் கருதப்படும் 4 வங்கி ஊழியர்களை ஐடிஎஃப்சி வங்கி உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்ததாவது: "ஒரு குறிப்பிட்ட வங்கிக் கிளையில் முறைகேடு நடந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த வங்கித் துறைக்கும் இதனால் எவ்விதப் பாதிப்பும் இல்லை. நிலைமையை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்" என்று குறிப்பிட்டார். முழுமையான விசாரணை மற்றும் சட்டரீதியான மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு மோசடிக்குள்ளான முழுத் தொகையின் மதிப்பு மற்றும் தாக்கம் குறித்து தெரியவரும் என வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.