logo

அதிகாரப் பங்கீடு விவகாரத்தில் திமுக மீது காங்கிரஸ் ஆதரவாளர் கடும் விமர்சனம்

சென்னை:
அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் தொண்டர்களின் நியாயமான விருப்பம் எனக் கூறி, அதை “ஆர்.எஸ்.எஸ் மனப்பான்மை” என விமர்சிப்பது தவறானது என்று திமுக ஆதரவாளர்கள் மற்றும் குறிப்பாக திமுக ஆன்லைன் ஆதரவாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அரசியல் கருத்துப் பதிவில், “காங்கிரஸ் நன்றி இல்லாமல் பேசுகிறது” என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்துள்ளார். தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்த போதும், பல கூட்டணி கட்சிகள் அதற்கு முன்வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிலிருந்து பல கட்சிகள் பிரிந்து, மக்கள் நல கூட்டணி அமைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்த காலகட்டத்தில், திமுக தலைவர் கலைஞரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து திமுகவுடன் உறுதியாக நின்ற ஒரே பெரிய தேசிய கட்சி காங்கிரஸ் தான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த தேர்தலில் காங்கிரஸுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மட்டுமே கூட்டணியில் இருந்தன என்றும் அவர் நினைவூட்டினார்.
2016 தேர்தல் முடிவுகளை மேற்கோள் காட்டிய அவர், அதிமுக 136 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்த போதும், அதிமுக–திமுக கூட்டணிகளுக்கிடையிலான வாக்கு சதவீத வித்தியாசம் வெறும் 1.5% மட்டுமே என தெரிவித்துள்ளார். திமுக–காங்கிரஸ் கூட்டணிக்கு 39.4% வாக்குகள் கிடைத்த நிலையில், அதிமுக கூட்டணி 40.9% வாக்குகளை பெற்றதாகவும் அவர் கூறினார்.
அதேபோல், 2014–2016 காலகட்டத்தில் காங்கிரஸ் கடுமையான வீழ்ச்சியை சந்தித்த நிலையிலும், 2016 தேர்தலில் 6.47% வாக்குகளை பெற்றதாகவும், 2014 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட திமுக 24%-க்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கலைஞர் அவர்களை அனைத்து கூட்டணி கட்சிகளும் கைவிட்ட நேரத்தில், அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் துணை நின்றது. எனவே நன்றி, விசுவாசம் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை” என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்யும் திமுக ஆதரவாளர்கள் பொறுப்புணர்ச்சியுடனும் கண்ணியத்துடனும் எழுத வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0
103 views