logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை..!

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் 'டிட்வா' புயலின் தாக்கத்தினால் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை முதல் இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழையின் அளவு குறித்த விரிவான அறிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த 12 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் சராசரியாக 9 செ.மீ மழை பதிவான நிலையில், செம்பனார்கோவில் பகுதியில் அதிகபட்சமாக 14 செ.மீ மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புயல் நகர்வு: தமிழ்நாட்டை நெருங்கும் 'டிட்வா'

இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல் தற்போது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

இன்று இரவு நிலவரப்படி, இந்தப் புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழகத்தின் வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

மேலும், காரைக்காலில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்தப் புயல் நிலை கொண்டுள்ளது.

நாளை அதிகாலை கரையை நெருங்கும் புயல்

இந்த டிட்வா புயல் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகரும்போது, வடதமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகளிலிருந்து இன்று நள்ளிரவில் 60 கி.மீ தொலைவிலும், நாளை அதிகாலை 50 கி.மீ தொலைவிலும், நாளை மாலை வெறும் 25 கி.மீ தொலைவிலும் கடலோரப்பகுதியை நெருங்கி வரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்

டிட்வா புயல் நாளை மாலைக்குப்பின் வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

“டிட்வா புயல் நாளை மாலைக்குப்பின் வலுவிழக்கக்கூடும். இந்தப் புயல் தமிழ்நாட்டில் கரையை கடக்க வாய்ப்பில்லை. புயலின் மையப்பகுதி கடலோரப்பகுதிகளில் நிலவும்” என்றார்.
மேலும், சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் கடற்கரைக்கு நாளை மாலை 25 கிலோ மீட்டர் வரை இந்தப் புயல் நெருங்கி வரும் என்றும், இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மயிலாடுதுறையில் கொட்டித் தீர்த்த மழை அளவு!

டிட்வா புயலின் தாக்கத்தினால் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (29.11.2025) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பதிவான பன்னிரெண்டு மணி நேர மழை அளவு குறித்த விரிவான அறிக்கை வெளியாகியுள்ளது.
மொத்தமாக, மாவட்டம் முழுவதும் 551.51 மி.மீ (அதாவது 55 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் ஒட்டுமொத்த சராசரி மழை அளவு 91.92 மி.மீ (அதாவது 9 செ.மீ) ஆகும்.

மாவட்டத்திலேயே அதிகபட்ச மழையானது செம்பனார்கோவிலில் பதிவாகியுள்ளது. இங்கு காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான 12 மணி நேரத்தில் மொத்தம் 146.40 மி.மீ (அதாவது 14 செ.மீ) மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, மாவட்டத் தலைநகரான மயிலாடுதுறையில் 112.00 மி.மீ (11 செ.மீ) மழையும், சீர்காழியில் 107.80 மி.மீ (10 செ.மீ) மழையும் பதிவாகியுள்ளது.

அதிக கனமழைப் பதிவான நேரம்

பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை உள்ள இரண்டு மணி நேர காலகட்டத்தில் தான் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் அதிகபட்சமாக 127.60 மி.மீ (12 செ.மீ) மழைப் பதிவாகியுள்ளது. இந்தக் குறுகிய காலகட்டத்தில், செம்பனார்கோவிலில் 35.60 மி.மீ மழையும், சீர்காழியில் 33.00 மி.மீ மழையும் என அதிகபட்ச கனமழை கொட்டியுள்ளது.
மொத்த மழை அளவு (காலை 8.30 - இரவு 8.30)
* செம்பனார்கோவில் 146.40 மி.மீ |
* மயிலாடுதுறை - 112.00 மி.மீ
* சீர்காழி - 107.80 மி.மீ
* மணல்மேடு - 78.00 மி.மீ
* கொள்ளிடம் * 73.60 மி.மீ
* தரங்கம்பாடி 33.71 மி.மீ
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

45
1257 views
1 shares

Comment