logo

அடங்கமறு அனலாய் எழு- ஈழத்துவரலாறு - Journalist SJ Gopaal

அடங்கமறு அனலாய் எழு- ஈழத்துவரலாறு - பிருங்கிமலை கோபால்

#முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடிய வேர்களை இலங்கையின் நீண்டகால அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளில் காண முடிவது எப்படி?

இனப்படுகொலை என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கை அல்ல. அது ஓர் ஒடுக்கும் சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது நீண்டகால அளவில் படிப்படியாகச் செயற்படுத்தும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளின் இறுதி விளைவு. எனவேதான் அதனைக் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என அழைக்கிறோம். இனப்படுகொலை நடைபெறும் பல்லினங்களைக் கொண்ட ஒரு நாட்டில் அரசற்ற தேசிய இனங்கள் எல்லாம் விடுதலை அடையலாம் என்றில்லை. ஆனால் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு, வெற்றி பெறுவதற்கான கடினமான பாதையாவது உண்டு. ஈழத்தமிழர் சார்ந்து காணப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வடிவம் மிகவும் வலுவானது. ஈழத்தமிழர் சார்ந்த அகத்தேசிய நிலை, உள்நாட்டு நிலை, அண்டை நாட்டு நிலை, அயல் நாடுகள் மற்றும் உலக நாடுகள் சார்ந்த நிலை, புவியியல் – வரலாற்று நிலை என்பனவற்றால் அது வலுவாக இறுக்கிக் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை விருப்பு – வெறுப்பிற்கு அப்பால், துல்லியமாக அளவீடு செய்யும் எத்தனமாக ‘இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் இன்றைய நிலையும்: கோட்பாடு – நடைமுறை – வரலாற்றுப் போக்கு’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமைகிறது.

தூய இலட்சியங்களினாலும், தர்ம போதனைகளினாலும், ஓசோனை உடைக்கவல்ல ஒப்பாரிகளினாலும், வரலாற்றை நிர்ணயிக்க முடியாது. சிங்கத்தின் பிடியில் யானையின் அலறல் காட்டைப் பிளந்து ஓசோனை உடைக்கும். ஆனாலும் கூட, யானையைக் கூறுபோட்டுச் சிங்கங்கள் உண்ணத் தவறுவதில்லை.

“எதனையும் அரசியலாகப் பார்க்க வேண்டும்;
அனைத்தும் அரசியலுக்குக் கீழ்ப்பட்டவையே”

அரசியல் என்பது நலன்களைக் கையாள்வது பற்றிய இயங்கியல் ஆகும். உறவுகள் நலன்களால் ஆனவை. நலன்கள் கொடுக்கல், வாங்கல் அல்லது ஆக்கிரமிப்பாலானவை. தாய்க்கும் – பிள்ளைக்கும், காதலனுக்கும் – காதலிக்கும், அயலவனுக்கும் – அயலவனுக்கும், அண்டை நாட்டுக்கும் – அயல் நாட்டுக்கும், உள்நாட்டுக்கும் – வெளிநாட்டுக்கும் இப்படி எதனை எடுத்துக்கொண்டாலும் அனைத்து உறவுகளும் நலன்களால் கட்டியெழுப்பப்படுபவை. தேவையே தர்மம்; நலன்களே அரசியல்; அரசியல் இன்றி அணுவும் அசையாது.

தேவையில் இருந்து நலனும், நலனில் இருந்து தேவையும், தேவையிலும் நலனிலும் இருந்து அதிகாரமும், அதிகாரமே அரசியலாகவும் வடிவம் பெறுகின்றன. அதிகாரத்தின் உச்சம் இறைமையாகவும் இறைமைக்கான நிறுவனப்பீடம் அரசாகவும் கட்டமைப்பாகின்றன. இந்த அரசைக் கோலோச்சுவது சார்ந்த நடப்பியலே அரசியலெனப்படுகிறது. இந்தவகையில், பூமியில் அனைத்துமே அரசியலுக்குக் கீழ்ப்பட்டவையே.

அதாவது, அரசு அதிகாரத்தைக் கையில் எடுப்பது பற்றிய வித்தைதான் அரசியலாகும். இந்த அரசியல் அதிகாரம் நீதி – தர்மம் – நியாயங்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அது தேவைக்கு ஏற்ப சூழல் சார்ந்த பலத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, உள்ளடக்கத்தில் தேவையிலிருந்து சூழல் சார்ந்த பலத்தைக் கையாளும் வித்தையே அரசியலாகும்.

இதன்படி அனைத்துவகையான புனிதப் பிரகடனங்களுக்கும் அப்பால், ‘வரலாறானது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது’ (‘History is written by victors’) என்பதே நடைமுறை உண்மையாகும்.

பூமியில் இருந்து கல்லை மேல் நோக்கி எறிந்தால், அது கீழ் நோக்கி விழுகிறது. இப்படி கல், கீழ் நோக்கி விழுவதற்குப் பெயர் தர்மம் அல்ல; அது இயற்கை விதி. ஆதலால், இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்துமே குறிப்பிட்ட விதிகளின் வழியே பயணிப்பவை என்பதால் தேவையிலிருந்து நலனைத் தெரிவு செய்து, தேவை + நலன் என்ற கூட்டு இணைப்பை விதிக்கு உட்படுத்தி, விதி வழியே இலக்கை அடையுமாறு வரலாறு கட்டளையிடுகிறது.

மொத்தத்தில், அனைத்துமே அரசியல். அரசியலின் உள்ளடக்கம் தேவைகளும் அதன்வழி நலன்களுமே. தேவைகளும் நலன்களும் ஏதோ ஒரு விதிக்கு உட்பட்டவை. அவ்விதியை அடையாளம் காண்பதற்கான கருவி அறிவியல். இதனால் அரசறிவியல், வாழ்வில் நிர்ணயகரமான ஒன்றாய்க் கோலோச்சுகின்றது. அந்த அறிவார்ந்த செங்கோலைக் கையில் ஏந்தித் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டும் என்பதே வரலாற்று நியதி.

இனப்படுகொலையை ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்று ஏன் சொல்கிறோம்?
இனப்படுகொலை ஏதோ ஒரு நாளில் திடீரென்று நடந்துவிடுவதல்ல. இனப்படுகொலை என்பது எப்போதும் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். கோட்பாட்டு அல்லது வரலாற்றுப் பரிமாணமின்றி ஒருபோதும் இனப்படுகொலை நிகழ முடியாது. அதன்படி, இனப்படுகொலை என்பது எப்போதும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையே ஆகும். இனப்படுகொலையானது தெளிவான தத்துவ அடிப்படையைக் கொண்டிருக்கும். ஆதலால், எப்போதும் இனப்படுகொலை என்பது தவிர்க்க முடியாதவாறு ஒரு தத்துவப் பிரச்சினையாயும் அமைந்திருக்கும்.

‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்ற பதம் இங்கு வெறும் சட்டப் பதமாக (Legal Term) மட்டும் பயன்படுத்தப்படவில்லை. கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை, சூழல் சார்ந்த காரண – காரியங்களுடன் நிகழ்கின்றது. நீண்ட வரலாற்றுப் பரிமாணங்களுடன் கூடிய அரசியல் – பொருளாதார – சமூகத் தேவைகளின் நிமித்தம் அரங்கேறுகின்றது.

கட்டமைப்பு (Structure) என்பது இங்கே அரசு, அரசியல் யாப்பு, சட்டங்கள், இராணுவம், போலீஸ், நிர்வாகம் போன்ற ஓர் அரசின் அடிப்படைக் கட்டமைப்பையும், சந்தைகள், வேளாண்மை, உற்பத்தி, கல்வி, சுகாதாரம் போன்ற சமூக, பொருளியல் அடிப்படை கட்டமைப்புகளையும் சேர்த்துக் குறிக்கிறது.

ஒரு தெளிவான தனித்துவம் கொண்ட பண்பாட்டு மக்கள் இனத்தின் தனித்துவத்தை இன, மத, மொழி, பிரதேச அடையாளங்களை, வாழ்வியலை, கட்டமைப்பு ரீதியாக அழிப்பதுடன், அரசியல் ரீதியாக அவர்களுக்கென்ற அரசியல் அதிகாரம், அதிகாரத்தில் பங்குவகித்தல் என்பனவற்றை எல்லாம் தோலிருக்கச் சுளை பிடுங்குவது போல் ஒவ்வொன்றாகப் பிடுங்கிவிடுவது இனப்படுகொலையாகும். இந்த வகைப்பாடானது உயிர் அழிப்பல்லாது, பண்பாட்டு இன அடையாளங்களை கட்டமைப்பு ரீதியாக, படிப்படியாக, நீண்டகால நோக்கில் அழித்தொழிப்பது என்ற போக்கிற்குரியது. இத்துடன் கூடவே இரத்தம் தோய்ந்த இனப்படுகொலையும், பொலீஸ், இராணுவ, சமூக, பொருளாதார, கல்வி ஒடுக்குமுறைகளும் கூட்டுச்சேரும்.

அதாவது, ஒரு மக்கள் கூட்டத்தின் தனித்துவத்தை, அவர்களின் அடையாளத்தை, அரசியல் – பொருளாதார இருப்பை, கடல், நிலம் வாழ் அதிகாரத்தை, உயிர் வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாகவும், பின்பு மொத்தமாகவும் அழிப்பது உட்பட, அனைத்தையும் உள்ளடக்கிய வகையில், ஓர் உடலின் அனைத்து உடற்கூறுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து முழுவடிவம் பெற்றுள்ளது போல, அனைத்தையும் தழுவிய (Holistic) முழுமைப்பட்ட இத்தகைய அழித்தொழிப்பு அணுகுமுறைக்கு ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்ற பதம் எடுத்தாளப்படுகிறது.

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது ஒரு முறைமை (System) என்ற வகையில் அது அதற்கே உரிய தர்க்கபூர்வப் போக்கைக் (Logical Development) கொண்டிருக்கும். முறைமை, தர்க்கபூர்வப்போக்கு என்பன நல்மனம் கொண்ட ஒரு சிலரின் அல்லது தனிமனித விருப்பு – வெறுப்புகளுக்கு அப்பால் தன்னகத்தே செயற்படும் வல்லமை கொண்டவை. இது தொடர்பாகப் பின்வரும் கோட்பாட்டு வகையான பார்வை கவனத்திற்குரியது.

“What is structural genocide?

Therefore, if adhering to the logic of a social system inevitably results in structural violence that causes death on a mass scale, then it is apparent that structural genocide is an intentional outcome of human behaviors that adhere to that logic.”

“ஒரு சமூக அமைப்பில் காணப்படும் தர்க்கபூர்வ விதிகளைக் கடைப்பிடிப்பதனால், அது தவிர்க்க முடியாத வகையில் பாரிய அளவு வன்முறைகளையும், மரணங்களையும் ஏற்படுத்தும் என்றால், அவ்விதிகளை மாற்றாது தொடர்ந்து அப்படியே கடைப்பிடித்துவரும் மனிதர்களின் நடத்தைகளினால், வேண்டுமென்றே, திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்படும் கட்டமைப்பே இனப்படுகொலை என்பது வெளிப்படை.”

அதாவது புவியியல், பொருளாதாரம், அரசியல், வாழ்க்கை முறை, பழக்கவழக்கம், வரலாறு மற்றும் வரலாற்றியல் ஆகியவற்றால் ஒரு சமூகம் இனப்படுகொலைக்கு உரிய வகையில் கட்டமைப்புச் செய்யப்பட்டு, அந்தச் சமூக அமைப்பு ஒரு முறைமையாகச் செயற்படும் இடத்தில், அந்தச் சமூக அமைப்பு முறையை மாற்றாமல், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குத் தீர்வு காண முடியாது என்பதே தத்துவார்த்த அரசியல் உண்மையாகும். இந்தவகையில், ‘இனப்படுகொலைக்கான பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே’ (Genocide can be compensated only by secession) என்ற கூற்றும் கவனத்திற்குரியது.

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை அல்லது வர்க்கப் பிரச்சினை தீர்ந்தால், இனப் பிரச்சினையும் தீர்ந்துவிடுமா?
மேலும், ஒரு தத்துவார்த்தக் கூற்றைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம். “காணப்படும் நிஜமான வாழ்க்கை நிலைமைகளில் இருந்து தத்துவப் பிரச்சினைகள் எழுகின்றன. அந்த நிஜமான எதார்த்தபூர்வ நிலைமைகளை மாற்றுவதன் மூலமே – உலகை மறு உருவாக்கம் செய்வதன் மூலமாக மட்டுமே அப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்.”

(“…philosophical problems arise out of real – life conditions, and they can be solved only by changing those conditions – by remaking the world.”)

அதாவது, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை, எதார்த்தபூர்வ வாழ்க்கை நிலையில், அதாவது அது நிஜமாக எவ்வாறு காணப்படுகிறதோ, அந்த வடிவில் தீர்க்காமல், வேறு வழியில், அதாவது பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் அல்லது வர்க்கப் பிரச்சினை தீர்ந்தால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று ஞானப்பால் குடிக்க முடியாது.

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது தனிப்பட்ட மனித மனதில் இருந்தோ அல்லது வெறும் கொலைவெறி மனப்பாங்கில் இருந்தோ உருவாகுவதில்லை. அது காணப்படும் புவியியல் – வரலாற்றுப் பின்னணியில் இருந்து உருவாகிறது. கி.மு ஆயிரமாம் ஆண்டுக்கு முன்பிருந்தே எகிப்தியர், பாரசிகர், பரந்த அரேபியர், ரோமானியர், பரந்த ஐரோப்பியர் என ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பியக் கண்டங்களைச் சேர்ந்த பல இனங்களாலும் யூதர்கள் அழிவுக்கும் துன்பத்திற்கும் உள்ளாகினர். இதற்கு இவர்களது புவிசார் அமைவிட அரசியற் பின்னணி பிரதான காரணமாகும். இத்தகைய புவிசார் அமைவிட வரலாற்றுப் பின்னணியில் (Geohistorical background) இருந்து இறைவனால் ‘வாக்களிக்கப்பட்ட பூமி – The Promised Land’ என்ற மத ரீதியான ஐதீகம் (Myth) கி.மு 1000 ஆம் ஆண்டளவில் வடிவம் பெறத் தொடங்கியது. எந்தவொரு ஐதீகத்துக்குப் பின்னாலும் அதற்கு அடிப்படையான ஒரு நிஜமான வாழ்வியற் பின்னணி அல்லது வரலாற்றுப் பின்னணி இருக்கவே செய்யும்.

யூதர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது மேற்படி மூன்று கண்டங்களையும் சேர்ந்த பல்வேறு இனங்களினாலும் காலத்துக்குக்காலம் அவரவர் பங்களிப்புக்கு உட்பட்டுச் சுமாராக மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றுப் போக்கில் திரட்சி பெற்ற ஒன்றாகக் காணப்படுகிறது.

இனப்படுகொலை என்றாலே அது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைதான். அதனை அவ்வப்போது எழுமாற்றாக நிகழும் ஒன்றாய், வெறும் உதிரி அர்த்தத்தில் பொருள் கொள்ளக்கூடாது. இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னான ஆதி மனித இனக்குழுக்களின் மத்தியில் ஓரினத்தை இன்னொரு இனம் அழித்துள்ள வரலாறுண்டு. உயிரை உயிர் உண்டு வாழ்வதே உயிர் வாழ்வு என்ற நியதிக்கு அமைய இனங்களும் அப்போதைய தத்தம் தேவைகளுக்கேற்ப ஓரினத்தை இன்னொரு இனம் கொன்று உயிர் வாழும் வரலாற்றுப்போக்கு இலட்சம் ஆண்டுகால மனிதகுல வரலாற்றில் உண்டு.

இனக்கலவரம் (Ethnic Riots), ஓரினத்தின் மீதான திட்டமிடப்பட்ட பாரிய படுகொலை (Pogrom), இன, மத, அரச அடிப்படையில் ஒரு மக்கள் கூட்டத்துக்கு எதிராகப் பரந்த அளவிலான படுகொலைகள் உட்பட, தீ வைத்தல் முதற்கொண்டு நாசகார வேலைகளைச் செய்தல் (Holocaust) என இனப்படுகொலை பற்றிப் பல உதிரியான பதங்கள் பயன்படுத்தப்பட்டாலும் இவை அனைத்துமே கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குள் அடங்குவனவாகும்.

முதன்முறையாக 1944 ஆம் ஆண்டு போலந்து யூத இனத்தவரான ராபேல் லிம்கின் (Raphael Lemkin) என்பவர் ‘Genocide’ என்ற பதத்தை வடிவமைத்தார். 1946 ஆம் ஆண்டு போலந்தில் நடந்த யூத இனப்படுகொலை விசாரணையின் போது ‘Genocide’ என்ற வார்த்தை ஒரு சட்டப்பதமாகப் பயன்பாடடைந்தது. இதன் பின்பு 1948 ஆம் ஆண்டு ஐ.நா ‘Genocide Convention’ உடன் சர்வதேச அளவில் ‘Genocide’ என்ற பதம் இணைத்துக்கொள்ளப்பட்டது.

‘Capitalism: A Structural Genocide’ என்ற தலைப்பில் Garry Leech என்பவர் எழுதி 2012 ஆம் ஆண்டு வெளியான நூலில், தற்போதைய உலகில் அரசுகள் மூலமாக நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு உலகளாவிய முதலாளித்துவம் அடிப்படைக் காரணம் என்று ஒரு தத்துவப் பின்னணி கூறப்படுகின்றது.

நவீன தொழில்சார் பண்ட உற்பத்தி, முதலாளித்துவம் போன்றவை தோன்றும் முன்பேயும் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயேயும் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. முதலாளித்துவத்தின் (Capitalism) மூலம் தனியார் முதலீடு (Private Investment), தனியார் முதலீட்டின் மூலம் தனியுடைமை (Private Ownership), தனி உடைமையின் மூலம் சொத்துடைமை (Property Ownership) என்று இதன் தத்துவப் பின்னணி பின்னோக்கிய மூலத்திற்குச் செல்லும்.

இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஓர் இனக்குழு தனது உயிர் வாழ்வுக்காக வளமான நிலத்தையும், நீர்நிலைகளையும், வளமான காட்டையும் கட்டுப்படுத்துவதற்காக இன்னொரு இனக்குழுவுடன் மோதி அதில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்வதில் இருந்து சொத்துடைமையின் மூலக்கூறை அடையாளம் காணலாம். இன்று காட்டுப் பிராணிகளின் வாழ்வியலில் பிராணிகளிடையேயான இருப்பிடத்திற்கு உரிமை கோருவதான மோதல்களில், இதற்கான தெளிவான மூலத்தைக் காணலாம். அதனை வனவியல் விஞ்ஞானத்தில் வாய்ப்பான பகுதி (Comfort Zone) என்றழைப்பர்.

தனியார் முதலீட்டை அடிப்படையாகக்கொண்ட உலகளாவிய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டமைப்புத்தான் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான மூலகாரணம் என்பது அறிவியல் சார்ந்த, தற்கால அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு கோட்பாட்டு விளக்கம். ஆனால், இதன்படி உலகளாவிய அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு மாறும் போது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும் இல்லாது போய்விடும் என்கின்ற ஒரு முடிவுக்கு வர நேர்கிறது. உண்மை அப்படி அல்ல; ‘ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது’. முதலாளித்துவக் கட்டமைப்பை மாற்றுவதற்கு இடையில் அந்தக் கட்டமைப்பின் விளைவான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை நடந்தேறி இன அழிப்புகள் ஆங்காங்கே பூர்த்தியாகிவிடும்.

‘ஏகாதிபத்தியத்தை விடவும் ஆபத்தானது இன அழிப்பு’ என்கின்ற வகையில் முதலில் இன அழிப்பைத் தடுப்பதற்கான பாதுகாப்பு முதன்மையானது. ஒரு பிரச்சினை எதார்த்தத்தில் எந்த வடிவில் காணப்படுகிறதோ அந்த வடிவில் அது முதலில் தீர்க்கப்பட்டாக வேண்டும். இது சார்ந்த குழப்பம் அதிகம் மார்க்சிச அல்லது கம்யூனிசவாதிகளிடம் ஏற்படுகிறது. ஆனால், இதற்கான சரியான நடைமுறையைப் பொதுவுடைமை அரசை நிறுவியவரான லெனினின் கோட்பாட்டிலும் நடைமுறையிலும் காணலாம். பொதுவுடைமைப் புரட்சிக்கு அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகத் தேசிய இனங்களின் பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமையை வரையறுத்து அதனை லெனின் முதன்மைப்படுத்தினார் என்ற நடைமுறை உண்மையை மேற்படி இடதுசாரிகள் பலரும் கண்டுகொள்ளத் தவறுகின்றனர். ‘தத்துவப் பிரச்சினை எதார்த்தத்தில் நிஜமான வாழ்நிலையிலிருந்து எழுகிறது’ என்கின்ற அறிஞர் மார்க்ஸின் கோட்பாட்டையும் மார்க்சிசவாதிகள் கவனிக்கத் தவறுகின்றனர்.

மனித வாழ்வுக்கு ‘உணவு, உடை, உறைவிடம்’ என்பன அடிப்படையானவையே ஆனாலும், பிராணிகள் ஆயினும் சரி, மனிதர்களாயினும் சரி, உயிர் வாழ்வுக்கு முதன்மையானது பாதுகாப்பு. எனவே பாதுகாப்பு இன்றி வேறு எதுவும் இருந்து பயனில்லை. ஆதலால், அடிப்படையிலும் அடிப்படையானது பாதுகாப்பு. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் முதலில் முன்னுரிமை கொடுப்பது தேசிய பாதுகாப்புக்காகும். இதனை மேலும் அழுத்தமாக தேசிய பாதுகாப்பும் பந்தோபஸ்தும் (National Defence and Security) என்ற பதமும் நடைமுறையும் விளக்கி நிற்கின்றது.

பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும், இனப்படுகொலை தீர்ந்துவிடும் என்ற வெறும் பொருளாதார வாதமானது இனப்படுகொலையை இன்னொரு வழியில் முன்னெடுப்பதற்கான மார்க்கமே ஆகும். இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை; பொருளாதாரப் பிரச்சினைதான் உண்டு; பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் இனப்பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும் என்று மஹிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் கூறிய ஆபத்தான பொருளாதார இனப்படுகொலை வாதத்தை உரிய வகையில் கண்டுகொள்ளத் தவற முடியாது.

2024 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அதன் முக்கிய வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க போன்றோரும் இத்தகைய கட்டமைக்கப்பட்ட பொருளாதார இனப்படுகொலை வாதத்தையே முன்நிறுத்தினர். இவர்கள் கூறும் பொருளாதார இனப்படுகொலை வாதத்துக்குள், தமிழ்த் தேசிய இனம், தன் தனித்துவத்தை இழந்து சிங்கள பௌத்த மயமாக்கத்திற்குள் கரைந்து அழிந்து போய்விடும்.

மனிதன் வெறுமனே ஒரு பொருளாதாரப் பிராணி அல்ல. பொருளாதாரத்துடன் கூடவே மொழி, பண்பாடு, கலை, தனித்துவம், வாழ்க்கைமுறை ஆகிய அனைத்து அம்சங்களினாலும் கூட்டாய்ப் பின்னிப்பிணைக்கப்பட்ட ஒரு தெளிவான சமூக வாழ்வைக் கொண்டவன். மனிதன் வெறுமனே ஓர் உணவுண்ணிப் பிராணியல்ல. சராசரி மனிதர்களின் கண்களில் வெறும் உணவுண்ணிகளாகத் தோன்றும் பிராணிகளிடத்திற்கூட தெளிவான பண்பாட்டு வேறுபாடுகளும், வாழ்க்கைமுறை வேறுபாடுகளும், தனித்துவங்களும் உண்டு என்பதைக் கண்டுகொள்வதற்கான மனத்தை மனிதன் விரிவாக்க வேண்டும். இன்று வளர்ந்து வரும் அறிவியல் துறையான பிராணிகள் நடத்தையியல் விஞ்ஞானம் (Animal Behavioral Science) பிராணிகளின் பண்பாட்டியல் பழக்கங்களைக் கூர்ந்து அவதானிக்கின்றது.

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை விவகாரத்தில் பொருளாதாரம் ஓர் அம்சமாக இருக்கின்றதே ஆயினும், அதனைக் குறித்த புவியியல், அரசியல், வரலாற்று வளர்ச்சிப்போக்கு என்பவற்றுக்கு ஊடாக, நடைமுறை சார்ந்து, இரத்தமும் தசையுமான வாழ்வியலுக்கூடாகப் பார்வையிட வேண்டும்.

நல்லதோ, கெட்டதோ எந்தவொரு செயலும் அல்லது நகர்வும் அவை தொடங்கிய இடத்தில் இருந்து அவை அவற்றுக்குரிய தர்க்கபூர்வப் பாதையில் பயணிக்கும். சமைப்பதற்கு விறகைக் கொளுத்தினால் அதில் வெப்பம் நேரடி விளைவாக (Direct Effect) வரும்போது புகை பக்கவிளைவாக (Side Effect) வருகிறது. இதில் பக்கவிளைவான புகையை எதிர்கொள்ளத் தவற முடியாது. புகையைப் புகையாக அணுகியாக வேண்டும். சமூகம், அரசியல், வாழ்வியல் அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே இனப்பிரச்சினையை அல்லது இனப்படுகொலையை பொருளாதாரப் பிரச்சினையின் வெளிப்பாடு என்று கூறிவிட்டு அதனை அதற்குரிய பரிமாணத்தில் அணுகத் தவற முடியாது.

எப்போதும் அடிப்படையையும் அதனோடு இணைந்த வெளிப்பாட்டையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதில் வெளிப்பாட்டைப் புறந்தள்ள முடியாது. அதாவது, நெருப்பில் இருந்து தோன்றும் புகை எப்படி பொய் இல்லையோ, அப்படியே வெளிப்பாடுகளுக்கும் அவையவற்றுக்குரிய உண்மைகள் அல்லது தாக்கங்கள் உண்டு. தத்துவம் நடைமுறைக்கு வழிகாட்ட வேண்டுமே தவிர, அது நடைமுறையில் இருந்து பிரிந்து கற்பனையில் இருக்க முடியாது.

ஆதலாற்தான் “எந்த ஒரு நடத்தையின் வெளிப்பாடும் அதற்குள் உள்ளடங்கி இருக்கும் தத்துவத்தை எமக்கு ஓரளவு சொல்லி நிற்கும்” (For the outcome, the outcome tells us something about the ideas.) என்ற தத்துவார்த்தக் கூற்றும் இவ்விடத்தில் கவனத்திற்குரியது.

அனைத்தையும் தழுவிய முழுமைப்படுத்தப்பட்ட அணுகுமுறை (Holistic Approach) என்ற அறிவியல் பார்வையில் நின்று, வேரில் இருந்து மரமென விரிந்து விழுது வரையான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் சூழலையும் உள்ளடக்கி, ஓர் உருவரை தீட்ட வேண்டும். அதனை அதனதன் சூழலில் வைத்து உரிய வகையில் அதற்கே உரிய தனித்துவமான வடிவில் எடைபோட வேண்டும்.

ஆதலால், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளை வெறும் பொத்தாம் போக்காகப் பார்க்காது அவற்றை அவற்றுக்குரிய தனித்துவமான பின்னணிகளில் வைத்து புவியியல் – அரசியல் – பொருளாதார – சமூகவியல் வரலாற்று வளர்ச்சிப்போக்கு என்பனவற்றிற்கு ஊடாக எடைபோட வேண்டியது முக்கியம்.

எந்த ஒரு தத்துவமும் நடைமுறையால் மெய்ப்பிக்கப்படாது விட்டால் அது வறண்ட வாதமே; எந்த ஓர் இலட்சியமும் நடைமுறைக்குப் பொருந்தாவிட்டால் அது கற்பனாவாதமே. கற்பனாவாதமும் வறண்டவாதமும் எதிரியின் கையில் கொடுக்கப்படும் கூரிய வாள்களாகும்.

TAGS

#sjgopaal #sivanadiyargopaal #eyemediatamil #emnewstamil
#emnews #eyemedianewstamil

#இந்துதமிழர்பேரவை #பிருங்கிமலைகோபால்
#tamilarsamayaiyakkam #தமிழர்சமயஇயக்கம் #tamildesiyam #எடப்பாடியார் #Edappadiyar #EdappadiPalaniswami #ADMK #MKStalin #DMK #UdhayanidhiStalin

#மாமன்னர்_இராவணன் #இராவணன்_புகழ்_ஓங்குக #தமிழர்_ஒற்றுமை #naamtamilarkatchi #seeman #தமிழர் #முள்ளிவாய்க்கால் #யாழ்ப்பாணம் #வன்னி #சிவனடியார்கோபால் #வரலாறு #history #TamilHeritage #ஈழம் #tamileelam #eelam #lanka #srilanka #ravana #ravanan #இராவணன்

0
88 views