புது கும்மிடிப்பூண்டியில் ஆசிரியர் தின விழா
கும்மிடிப்பூண்டி,செப்.5. கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கரும்பு குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்குள்ள 9 அங்கன்வாடி மையங்களில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது.புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி முன்னாள் தலைவர் மா.செல்வராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழா நடைபெற்றது. புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேலு வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மா.செல்வராஜ், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் வெங்கடேசன், சமூக ஆர்வலர் அம்பேத் நடராஜன் பங்கேற்று ஆசிரியர் தின வாழ்த்துரை வழங்கினர்.இதனை தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னாள்ஊராட்சி தலைவர் மா.செல்வராஜ் சால்வை அணிவித்து கெளரவித்து, அவர்களுக்கு பரிசளித்து அவர்களது சேவையை பாராட்டினார்.இதனை தொடர்ந்து கரும்புகுப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. பின்னர் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள 9 அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர்.