logo

தமிழ்நாட்டில் கடலும், மலையும் உள்ள ஒரே மாவட்டம் கன்னியாகுமரி!

தமிழ்நாட்டில் கடலும், மலையும் உள்ள ஒரே மாவட்டம் கன்னியாகுமரி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான அகத்தியர் மலைத்தொடர் இருக்கிறதுஅதே சமயம், கன்னியாகுமரியில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி அதிசயம் நிறைந்த சர்வதேச சுற்றுலா தலங்கள் உள்ள மாவட்டம் ஆகும். தமிழ்நாட்டில் இருந்தாலும் கேரளாவை போல் அள்ள அள்ள குறையாத இயற்கை வளங்கள் உள்ள மாவட்டம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என ஐந்து வகை நிலமும் உள்ள மாவட்டம் என்று கூறலாம். ஆனால் பாலை நிலம் மட்டும் இருப்பதாக கூற முடியாது. அதாவது வறண்ட நிலமே இல்லை. அவ்வளவு பசுமையான மாவட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி முக்கடல் சந்திக்கும் கடற்கரை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை,உலக்கை அருவி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. கன்னியாகுமரி சென்றால் மூன்று கடல்களின் சங்கமத்தைக் காணலாம். கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவற்றைக் காண பெரிதும் விரும்புவார்கள். கடற்கரைக்கு அருகில் உள்ள கலங்கரை விளக்கத்தில் கடற்கரையின் அழகை முழுமையாகக் காண முடியும்.

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையும் இன்றும் பிரமிப்பை தரும். கடலுக்குள் அமைந்துள்ள ஒரு பாறை மீது விவேகானந்தர் பாறை நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதைச் சுற்றி, 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. படகுப் பயணம் மூலம் இங்குச் சென்று இந்த நினைவுச் சின்னங்களை கண்டுகளிக்காமல் கன்னியாகுமரி சுற்றுலா முழுமையடையாது. கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் சூரிய ஒளி படும் விதமாக ஒரு சிறப்பு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலை கடற்கரைக்கு வரும் அனைவரும் தரிசித்து செல்வார்கள்.

கன்னியாகுமரியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருநந்திக்கரை குகைக் கோயிலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

கன்னியாகுமரியிலிருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அரண்மனை, திருவிதாங்கூர் மன்னர்களின் முன்னாள் தலைநகராக இருந்து வந்தது. இது கேரள கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. இந்த அரண்மனை காண்போரை திகைப்பில் ஆழ்த்தும்

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மலையில் கோதையாற்றின் கரையில் அமைந்துள்ள திருபரப்பு நீர்வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு குளிக்காமல் போனால் கன்னியாகுமரி வருவதே வீண் என்று தோன்றும். அந்த அளவிற்கு அழகான இடம் ஆகும்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப்பாலம் ஆகும். இது கன்னியாகுமரியிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த தொட்டிப்பாலம் அருவி கிடையாது. ஆனால் அருவிக்கு நிகரான பிரமிப்பை தரும். ஒரு மலைக்கும் மற்றொரு மலைக்கும் இடையே கட்டப்பட்டு, தண்ணீர் கொண்டு செல்லும் பாலமாக இருக்கிறது.இந்த பாலத்தில் குளிப்பதை பலரும் விரும்புகிறார்கள்.

நாகர்கோவிலில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அழகியபாண்டியபுரம் ஊரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள அருவி உலக்கை அருவி. இந்த அருவிக்கு அடர்ந்த காடு இடையே குறுகலான பாதை வழியாக போக முடியும்.போகும் வழியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என காட்சி அளிக்கும் பசுமை மாறாத காடுகள் இருக்கும். வெள்ளியை உருக்கியது போல் இயற்கையாக உருவான இந்த அருவியில் ஆண்டு முழுவதும் குளிர்ந்த தண்ணீர் கொட்டும். இந்த தண்ணீர் மலையில் இருந்து வருவதால் அதில் குளிக்கும் போது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பசுமை சூழலில் அமைந்துள்ள மற்றொரு சுற்றுலா ஸ்தலம் காளிகேசம். இது பூதப்பாண்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு குளிர்ந்த நீருடன் ஓடும் காட்டாற்றில் குளிப்பதை இயற்கை விரும்பிகள் பெரிதும் விரும்புகிறார்கள். அடர்ந்த காடுகள் மற்றும் பசுமையின் பின்னணியில் பாறைகளில் இருந்து தண்ணீர் ரம்மியாக வரும். இங்கு ஆற்றின் கரையில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இவர்கள் அங்குள்ள ஆற்றில் புனித நீராடி அம்மனை வழிபடுவார்கள். இந்த கோவிலுக்கு காட்டாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும் போது கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். உலக்கை அருவி, காளிகேசம் ஆகிய இரண்டு இடங்களுக்கு செல்ல வேண்டும் எனில் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீரிப்பாறை வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, அமைதியான சூழலை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக பார்க்கப்படுகிறது.இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால், இயற்கையை ரசிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு என்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டமே இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் என்பதால், மொத்த மாவட்டத்தையும் இரண்டு நாள் இருந்து அழகாக சுற்றி பார்த்து வரலாம்.. அப்படியே இறுதியாக திருவனந்தபுரம் தேசிய பூங்கா சென்று வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவை போல் ரசித்துவிட்டு திரும்பலாம்.


0
24 views