
மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. கம்பம் பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு
மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
மதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களை நான் விமர்சிக்க தயாராக இல்லை,
அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என கம்பத்தில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.
தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் காக்கவும், ஜனநாயகத்தை பாதுகாத்திடவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழ்நாட்டில் 8 இடங்களில் பரப்புரை செய்கிறார். அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி திடலில் முல்லைப் பெரியாறும், நியூட்ரினோவும் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தேனி மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், முல்லைப் பெரியார் அணையை பலப்படுத்த வேண்டும் என்ற போது, முல்லை பெரியாறு அணையின் நீர்தேக்க உயரத்தை குறைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர். அணையை பலப்படுத்திய பிறகு நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்தவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அப்போது கேரள மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த அச்சுதானந்தன் சட்டமன்றத்தைக் கூட்டி கேரளா மாநிலத்தில் உள்ள நீர் தேக்கங்களை, விரிவாக்கலாம், உடைக்கலாம், தரை மட்டமாக்கலாம் இதில் இந்தியாவில் உள்ள எந்தசிவில் கோர்ட், சுப்ரீம் கோர்ட் உட்பட எந்த கோர்ட்டும் விசாரிக்க முடியாது என அவசர மசோதவை நிறைவேற்றியது. இதையெல்லாம் மீறி பல்வேறு சட்ட போராட்டங்கள் மூலம் முல்லைப் பெரியாறு அணையை மீட்டெடுத்தோம். அணையில் 142 அடி தண்ணீர் தேக்கவும், பேபி அணியை பலப்படுத்திய பின் 152 அடி தண்ணீர் திறக்கவும் உரிமை பெற்றோம். முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காக எந்த நேரமும் போராட்டத்தில் கலந்து கொள்ள நான் தயாராக உள்ளேன். அதுபோல் நியூட்ரினோ திட்டத்திற்காக தேனி மாவட்டம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையை தேர்ந்தெடுத்தது. பிரதமர் மோடி நியூட்ரினோ திட்டம் தனது கனவு திட்டம் எனக் கூறி வந்தார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணை உட்பட 30 அணைகள் உடைந்து போகும் என்பதால் நான் கேரள மாநிலத்திற்கு சென்று இந்த உண்மையை கேரள முதலமைச்சர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து நியூட்ரினோ திட்டம் குறித்தும், நியூட்ரினோவால் பெரிய ஆபத்து வரும் எனக் கூறிய போது, கேரளாவில், வைகோ மரிக்கெட்டே (சாகட்டும்) என்று என்னை எதிர்த்தவர்கள் கூட வரவேற்றார்கள். இந்தத் திட்டத்திற்காக சட்டப் போராட்டம் நடத்தினேன். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையும் இடம் பெற்றிருக்கிறது. அதில் ஒரு துரும்பையும் அசைக்கக்கூட கூடாது என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தேன். அதனை முக்கிய பாயிண்டாக வைத்து கொண்டு நீதிமன்றம் நியூட்ரினோ திட்டத்திற்கு தடை செய்தது.
ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி துரை வைகோ பிரதமரை சந்தித்து பேசினார். இதை, மதிமுக கூட்டணி மாறுவதாக அவதூறு செய்திகளை பரப்புகிறார்கள். ஆனால், எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன், திமுக எம்பி கனிமொழி பிரதமரை சந்தித்து பேசுகிறார்கள். அதைப் பற்றி எதுவும் கேள்வி எழுப்பப்படவில்லை. மாறாக வேண்டுமென்றே மதிமுக மீது இத்தகைய அவதூறு விமர்சனங்களை சிலர் முன்வைக்கிறார்கள்.
மதிமுக என்ற இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.
மதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களை நான் விமர்சிக்க தயாராக இல்லை,
அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.
கூட்டத்தில், முன்னாள் ஐந்து மாவட்ட தலைவர் அப்பாஸ், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மற்றும் மதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் மதிமுகவினர், பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் சந்தனகுமார் நன்றி கூறினார்.