நடிகர் சூர்யா பிறந்தநாள். ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய நற்பணி மன்றத்தினர்
தேனி மாவட்டம் கம்பத்தில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர் நற்பணி மன்றத்தினர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைகவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.திரைப்பட நடிகர் சூர்யாவின் 50 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்றத்தினர் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டம் கம்பத்தில் தேனி தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். மேலும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கினார். கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தேனி தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி மன்ற இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கம்பம் நகரம் மற்றும் ஒன்றியத்தை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடிகர்களின் பிறந்தநாள் என்றாலே கட்டவுட்டுக்கு பால் ஊற்றும் கலாச்சாரத்தை மாற்றி,போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நற்பணி மன்றத்தினர் ஹெல்மெட் வழங்கிய நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் பாராட்டுக்களை பெற்றது.