
சமூக நீதி விடுதி. பெயர் மாற்றம் செய்ய எதிர்ப்பு. கூடலூரில் பெயர்ப்பலகை கிழித்தெறிந்து போராட்டம்
தேனி மாவட்டம் கூடலூரில் அரசு கள்ளர் பள்ளியில் உள்ள விடுதியின் பெயரை சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மாணவர் சங்கத்தினர் பெயர் பலகை கிழித்து எரிந்து போராட்டம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளில் ஜாதியின் பெயர் இருக்கக்கூடாது என்றும் மாறாக ஜாதியின் அடிப்படையில் இருந்த விடுதிகள் அனைத்தும் சமூக நீதி விடுதிகள் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதன் காரணமாக நேற்று முதல் விடுதிகளின் பெயர் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
இதில் அரசு கள்ளர் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கள்ளர் இன மக்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். சமூக நீதி விடுதி பெயர் மாற்றத்தை கண்டித்து, நேற்று கம்பத்தில் தேவர் சிலை முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள ராஜாங்கம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியின் உள்ளே இருக்கக்கூடிய அரசு கள்ளர் விடுதியை, சமூக நீதி விடுதி என பெயர் பெயர் மாற்றம் செய்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் ராஜீவ் காந்தி தலைமையில், போராட்டம் நடத்தினார்கள்.
முன்னதாக விடுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார். இதனால் காவல்துறை மற்றும் விடுதி காப்பாளருக்கும் முன்னாள் மாணவர் சங்கத்தினருக்கும் வாக்குவதும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் விடுதி முன்பாக சமூக நீதி விடுதி என்று ஒட்டப்பட்டிருந்த ப்ளக்ஸ் ஐ கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், அரசு கள்ளர் பள்ளி அமைந்துள்ள இடம் தங்கள் சமூகம் சார்ந்தவர்களின் நலனுக்காக, அவர்கள் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்ட இடம். அந்த இடத்தில் அரசு கள்ளர் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விடுதியில் தங்கி பயிலக் கூடிய மாணவர்கள் அனைவரும் கள்ளர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள். அவ்வாறு இருக்கையில் எதற்காக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தருவதில்லை, குடிநீர் வசதி, விளையாட்டு திடல் வசதி, சரியான ஆசிரியர் வசதி உள்ளிட்ட எந்த ஒரு வசதிகளும் செய்து தராமல் விடுதியின் பெயர் மாற்றம் செய்வதில் மட்டும் எதற்காக அரசு மும்மரம் காட்டுகிறது. எனவே விடுதியின் பெயர் மாற்றத்திற்கு அனுமதிக்க முடியாது. இந்த சமூக நீதி விடுதிகள் என்ற பெயரினை ஏற்க முடியாது, அரசு இதனை மாற்றி மீண்டும் முன்பிருந்த பேரில் விடுதி செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றனர்.