
தாக்குதலுக்கு பாக். உதவியது: தஹாவூர் ராணா ஒப்புதல்
2008, நவம்பர் 26ல் மும்பையில் 10 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 அப்பாவிகள், 9 பயங்கரவாதிகள் இறந்தனர். இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவன் தஹாவூர் ஹூசைன் ராணா. அவனுக்கு இப்போது 64 வயதாகிறது. அமெரிக்காவில் இருந்த ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க மத்திய அரசு தொடர்ந்து கோரி வந்தது. நீண்ட நெடிய சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த ஏப்ரலில் ராணாவை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்தியா கொண்டு வந்தனர். தற்போது சிறையில் உள்ள அவனிடம் என்.ஐ.ஏ. மற்றும் மும்பை கிரைம் போலீஸ் அதிகாரிகள் மும்பை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். அவர்களுடைய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அது குறித்த விவரம் வருமாறு தஹாவூர் ராணா பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். டாக்டராகி பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிந்தார். அவர் மனைவியும் ஒரு டாக்டர். இருவரும் 1997ல் கனடா சென்றனர். கனடாவில் குடியுரிமை பெற்றனர். பிறகு சிகாகோவில் First World Immigration Services எனும் புலம்பெயர் சேவை நிறுவனத்தை ராணா தொடங்கினார். அதன் கிளை நிறுவனத்தை மும்பையில் அமைத்தார். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து விலகினாலும், அதனுடனும் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடனும் தொடர்பில் இருந்தார். 2008ல் மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு ராணாவுடன் சேர்ந்து செயல்பட்டவன் டேவிட் கோல்மன் ஹெட்லி. அமெரிக்காவைச் சேர்ந்த இவனும் பாகிஸ்தானில் பிறந்தவன் தான். ராணாவின் பள்ளித் தோழனும் கூட. இருவரும் சேர்ந்து மும்பை தாக்குதலை திட்டமிட்டனர். அதற்கு ராணா தொடங்கிய நிறுவனத்தின், மும்பை கிளை அலுவலகத்தை பயன்படுத்திக்கொண்டனர். 2008ல் மும்பையில் தாக்குதல் நடத்துவதற்காக, ராணா 2005 முதலே திட்டமிட்டு வந்துள்ளான். லஷ்கர்-இ-தொய்பா, ஹர்கத் உல்-ஜிஹாத்-இஸ்லாமி ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து தாக்குதலை திட்டமிட்டான். மும்பை தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் ராணா மும்பை, டில்லி, ஆக்ரா, கொச்சி முதலான நகரங்களுக்கு தன் மனைவியுடன் பயணம் செய்துள்ளான். ஹெட்லியுடனும் தொடர்பில் இருந்திருக்கிறான். அவன் இந்தியா வருவதற்கும், மும்பை ரயில் நிலையம், தாஜ் ஓட்டல் முதலிய இடங்களை நோட்டமிடுவதற்கும் ராணா உதவி செய்து இருக்கிறான். பாகிஸ்தானின் நம்பகமான ஏஜென்ட்டாக ராணா செயல்பட்டதை என்.ஐ.ஏ. விசாரணையில் ஒப்புக்கொண்டான். 2003 - 04ல் லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்களில் பங்கேற்றேன்., மும்பை தாக்குதல் நடந்தபோது அந்த நகரத்தில்தான் இருந்தேன் எனவும் ராணா வாக்குமூலம் அளித்துள்ளான். மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் உதவின என்றும் ராணா விசாரணையின் போது ஒப்புக் கொண்டிருக்கிறான் என அதிகாரிகள் கூறினர்...