logo

மாலி நாட்டில் 3 இந்தியர்கள் கடத்தல்: அல்கொய்தா ஆதரவு அமைப்பு அட்டகாசம்

மாலி நாட்டில் 3 இந்தியர்களை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் குழு கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடு மாலி. இங்குள்ள கெய்ஸ், நியோரோடு சஹேல், நியோனா உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்போது காயேஸ் பகுதியில் உள்ள வைர தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். இந்த கடத்தலுக்கு அல்கொய்தா துணை அமைப்பான ஜேஎன்ஐஎம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தியர்கள் கடத்தப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்து, அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறி உள்ளதாவது; ஜூலை 1ம் தேதி ஆயுதங்கள் ஏந்திய பயங்கரவாதிகள் குழு ஒன்று தொழிற்சாலை வளாகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அப்போது 3 இந்தியர்களை வலுக்கட்டாயமாக பிணைக் கைதிகளாக பிடித்துள்ளனர். மாலி நாட்டில் உள்ள பமாகோ பகுதியில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களுடன் பேசி வருகிறோம். இந்த சம்பவத்தை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. கடத்தப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாலி அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0
65 views