
பிரபல தமிழ் நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவால் காலமானார்
பிரபல நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. நடிகர் ராஜேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இதனையடுத்து, அவரது உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ராஜேஷின் மரணம், திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அணைக்கட்டு பகுதியை சேர்ந்த நடிகர் ராஜேஷின் இயற்பெயர் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகும்.
1974 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஜேஷ். 1979 ஆம் ஆண்டில் கன்னிப் பருவத்திலே என்ற படத்தின் மூலம் இவர் ஹீரோவானார்.
50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இயங்கி வரும் நடிகர் ராஜேஷ் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு எழுத்தாளரும் ஆவார். குறிப்பாக ஜோசியம் தொடர்பாக இவர் பல நூல்களை எழுதியுள்ளார். இதேபோல ஹாலிவுட் நடிகர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும் புத்தகங்களை எழுதியுள்ளார்..
டப்பிங் கலைஞராகவும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார். ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களிலும் இவர் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.