logo

ஊத்துக்கோட்டை அருகே பெரம்பூர் கிராமம் பாஞ்சாலி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக்கோயிலில் தீமிதி திருவிழா

ஊத்துக்கோட்டை அருகே பெரம்பூர் பாஞ்சாலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா  வெகு விமர்சையாக  நடைபெற்றது.இதில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பெரம்பூர் பாஞ்சாலி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா  ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 02-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல்,கங்கை திரட்டுதல், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. நாள்தோறும் மூலவருக்கு பால், தயிர்,சந்தனம், ஜவ்வாது,பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனை அடுத்து காப்பு கட்டி விரதம் இருந்த 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி,உடல் முழுவதும் சந்தனம் மலர்களால்,அலங்காரம் செய்து ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் ஒருவருக்கு பின் ஒருவர் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வண்ண மலர்களாலும், திருஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் மேளதாளங்கள் முழங்க,இரவை பகலாக்கும் வான வேடிக்கையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

0
620 views