
கம்பத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் பேரிடர் நிவாரண நிதி : தேனி எம்.பி தங்கதமிழ்செல்வன் வழங்கினார்.
கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த 4ம் தேதி இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கம்பம் நகராட்சி 26 , 27 மற்றும் 29 வது வார்டு பகுதிகளான பார்க் ரோடு ,நெல்லு குத்தி புளியமரம் தெரு,போர்டு ஸ்கூல் தெருக்களில் உள்ள ஓடைகளில் மழைநீருடன் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள நகராட்சி மெயின் ஆரம்பப் பள்ளியை ஒட்டி செல்லும் ஓடையில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் கால்வாயில் தண்ணீர் செல்லமுடியாமல் கழிவு நீருடன் மழை நீர் பள்ளியை வளாகத்தில் சூழ்ந்தது பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்து கிழக்கு பகுதி வழியாக வெளியேறி அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் தண்ணீர் புகுந்து குளம் போல் தேங்கி நின்றது.இந்த தண்ணீரால் மதில் சுவர்கள் ஈரப்பதம் தாங்க முடியாமல் சுவர்கள் இடிந்து விழுந்தன.இதையடுத்து கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன்,தாசில்தார் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின்னர் பேரிடர் நிதி வழங்கும் வகையில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் &டம் வழங்கினர்.அதன் பேரில் தலா ரூபாய் 4 ஆயிரம் வீதம் 4 பயனாளிகளுக்கு பேரிடர் நிதி வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று பயனாளிகளின் வீட்டிற்கே சென்று பேரிடர் நிதி மற்றும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வேஷ்டி,சேலையினை தேனி எம்.பி தங்கதமிழ்செல்வன் வழங்கினார். இதனை தொடர்ந்து நகராட்சி மெயின் ஆரம்ப பள்ளி வளாகம் மற்றும் ஓடையை ஆய்வு செய்தார்.பின்னர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் ,மதிய உணவினை ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில் கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன்,நகராட்சி ஆணையாளர் உமாசங்கர், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார்,உத்தமபாளையம் மண்டல துணை தாசில்தார் கார்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் பால்பாண்டி, உசேன் மற்றும் கவுன்சிலர்கள் விருமாண்டி, செந்தில்குமார், அபிராமி, லதா ,துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வேல் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.