
தெருநாய் பிரச்சினைக்குத் தீர்வு இல்லையா?
நாய்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கு என்ன இருக்கிறது?” - 17 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் தெருநாய்கள் குறித்து ‘ரோ-இண்டிஸ்’ என்கிற அமைப்பு ஆய்வு நடத்தியபோது, மக்கள் இப்படித்தான் கேட்டனர். கடந்த சில ஆண்டுகளில் அந்த மனநிலை முற்றிலும் மாறிவிட்டதாக இந்த ஆய்வை நடத்திய அரசியல்- சுற்றுச்சூழல் நிபுணர் கிருத்திகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். நன்றி உணர்வுக்கான உதாரணமான நாய், அண்மைக்காலமாகப் பெரும் தொந்தரவாகவும் ஆபத்தை விளைவிப்பதாகவும் மாறிவிட்டதை யாரும் மறுக்க முடியாது. தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நிகழ்ந்த நாய்க்கடிச் சம்பவங்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் எனத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை கூறுகிறது. 2024இல் 47 பேர் ‘வெறிநாய் நோய்’ (ரேபிஸ்) தொற்றால் இறந்துள்ளனர். இவர்களில் குழந்தைகளும் இளைஞர்களும்தான் அதிகம்.
2021இல் இந்தியாவில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 22% பேரின் இறப்புக்குத் தெருநாய்கள் காரணமாக இருந்ததாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. ஒரு காலத்தில் நாய்க்கடிக்கு முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசு பரப்புரை செய்ய வேண்டியிருந்தது. இப்போது நாய்களைக் கையாள்வது எப்படி எனத் திட்டமிடல்கள் வலியுறுத்தப்படும் அளவுக்குச் சூழல் தீவிரமாக மாறிவிட்டது. 2017 நிலவரப்படி இந்தியாவில் ஏறக்குறைய 40 நபர்களுக்கு ஒரு நாய் என்கிற வீதத்தில் நாய்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. எந்த ஓர் உயிரும் அளவுக்கு அதிகமாகப் பெருகும்போது சூழலில் எதிர்மறையான தாக்கம் கட்டாயம் நிகழும். எல்லாச் சுற்றுச்சூழல் சிக்கல்களையும்போல, இதற்குப் பின்னாலும் மனிதர்கள் தான் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகச் சமூகம் காட்டும் பரிவுதான் இவற்றைப் பெருகச் செய்கிறது. தெரு நாய்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் வந்து பிஸ்கட் போடுபவர்களும் இரு சக்கர வாகனத்தில் வந்து சோறு போடுபவர்களும் இதில் ஒரு சிறு பகுதியினரே. சென்னையைப் பொறுத்தவரை, மீதமுள்ள உணவை அளிப்பது, குடிக்கத் தண்ணீர் வைப்பது, மழைக்காலங்களில் ஒதுங்க இடம் தருவது போன்றவை மூலம் மக்கள் தொகையில் ஏறக்குறைய 60% பேர், நாய்களுக்கு உதவுவதாக ‘ரோ-இண்டிஸ்’ ஆய்வு கூறுகிறது. உணவு வீணாக்கப்படுவது ஒரு கலாச்சாரமாகவே உருவெடுத்துள்ளது. இந்தப் போக்கு, தெருநாய்களின் பெருக்கத்துக்கு இன்னொரு காரணம் எனச் சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். உணவு தடையின்றிக் கிடைக்கும் சூழலில், தெருநாய்கள் அதிகரிக்கின்றன. உணவுக் கழிவையும் மக்காத கழிவையும் தரம்பிரிக்காமல் ஒன்றாகவே விட்டுச்செல்வது, சுகாதாரக்கேட்டை விளைவிப்பதாக மட்டுமே அணுகப்படுகிறது. இந்த மோசமான பழக்கம் நாய்களுக்குச் சாதகமான உணவுச்சூழலை உருவாக்குவதைப் பெரும்பான்மைச் சமூகம் உணரவில்லை. உணவுக் கழிவு இறைந்து கிடக்கும் குப்பைக்கிடங்குகள், நாய்களின் ஆக்கிரமிப்புப் பகுதியாக மாறுகின்றன. நாய்களுக்குக் கருத்தடை செய்வது பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு நடவடிக்கை. அரசு நிர்வாகமும், விலங்கு ஆர்வலர்களும் இதை வலியுறுத்துவதற்கும் அது செயல்படுத்தப்படுவதற்குமான இடைவெளி மிக மிக அதிகம். நாய்களுக்குக் கருத்தடை என்பது 75 வழிகாட்டல்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நடவடிக்கை. இதைச் செயல்படுத்துவதற்கான கால்நடை மருத்துவர், உள்ளாட்சி ஊழியர்களின் எண்ணிக்கை பல இடங்களில் பற்றாக்குறையாகவே உள்ளது. பல நகராட்சி நிர்வாகங்கள் இந்தப் பணிக்குத் தன்னார்வலர்களையும், தொண்டு நிறுவனங்களையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. அன்றாடம் களப்பணி செய்ய வேண்டிய அடிமட்ட உள்ளாட்சி ஊழியர்களே தெருநாய்களுக்குப் பயந்து வேலை செய்து கொண்டிருக்கும் நிலைதான் நிலவுகிறது. முதுமலை வனவிலங்குச் சரணாலய எல்லைக்குள் இருக்கும் சில கிராமங்களில் 2000இல் ரேபிஸ் தொற்றுக் காரணமாக நாய், மாடு மட்டுமல்லாது மனிதர்களும் இறப்பது அதிகளவில் இருந்தது. உலகளாவிய இந்தியக் கால்நடைப் பணிகள் (டபிள்யு.வி.எஸ்.) என்கிற அமைப்பு இதைத் தடுப்பதற்காக ரேபிஸ் தடுப்பூசி போடுவது, விரை நீக்கம் உள்படக் கருத்தடை செய்தல் ஆகியவற்றை மேற்கொண்டது. இதற்கு உடனடியாகப் பலன் கிடைக்காவிட்டாலும், 2005இல் அப்பகுதியில் ரேபிஸ் தொற்று இல்லை என்கிற நிலை உருவானது. “நாங்கள் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரை செய்தோம். மக்களின் பங்களிப்பு இந்தப் பணிக்கு அவசியம். ஒரு பகுதியில் வசிக்கும் நாய்களில் 70%க்குக் கருத்தடை செய்தால் மட்டுமே அவற்றின் பெருக்கத்தைக் குறைக்க முடியும். குறைந்த எண்ணிக்கையில் கருத்தடை செய்தால், அது பலனளிக்காது” என்கிறார் இந்த அமைப்பின் தலைவர் நைகல் ஓட்டர். புதிய பகுதியில் இருந்து நாய்கள் வருவதைத் தடுப்பதும் முக்கியமானது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் விலங்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும் என்கிற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதற்காக ஏற்கெனவே இயங்கும் அமைப்புகளின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட வேண்டும். வெறிநாய் நோய்த்தொற்று’க்கு உள்ளாகும் நாய், இறப்பதற்கு 10 நாள்கள் வரை ஆகின்றது. ஒரு கி.மீ. தூரம் வரை திரிந்து, உமிழ்நீராலும் மற்ற விலங்குகளைக் கடித்தும் அது தொற்றைப் பரப்புகிறது. அவை 60 நாள்களுக்குப் பின்னர் கூடத் தொற்றுக்கு உள்ளாகலாம். இதன் மூலம் தொற்று மேலும் அதிகமாகப் பரவுகிறது. இந்நிலையில், நாய்களுக்குத் தடுப்பூசி போடுவது இன்னொரு காப்பு நடவடிக்கை. சென்னையில் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டாலும், அவை தெருநாய்களின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் தொடர்ச்சியாகவும் நடைபெறுகின்றனவா என்பது கேள்விக்குரியது.
5 லட்சம் நாய், செல்லப் பிராணிகளுக்குப் பாதி மானியத்துடன் தடுப்பூசி போட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தமிழகக் கால்நடைப் பராமரிப்புத் துறை கடந்த ஆண்டு கூறியது. நோய்களைக் கண்டறிவதற்கான நவீனக் கருவிகளைக் கையாள்வதற்கு 400 கால்நடை அறிவியல் மருத்துவர்களுக்குத் திறன் மேம்பாட்டு முகாம்கள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதெல்லாம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும். நாய்களின் நலனுக்காகக் குரல் கொடுக்கும் புளூ க்ராஸ் போன்ற அமைப்புகள், காயமுற்ற நாய்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அரசுக்கு ஒத்துழைப்பதில் அத்தகைய அமைப்புகளுக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. கருத்தடை என்பது நாய்க்கடிச் சிக்கலுக்கு நிச்சயமாக உடனடித் தீர்வல்ல. மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகத் திரியும் நாய்களை உடனுக்குடன் எதிர்கொள்ள வேண்டிய தேவை வலுவாக இருக்கிறது. மனிதர்களைக் கடிப்பதும் வாகனங்களைத் துரத்துவதுமாக இருக்கும் நாய்கள் குறித்த புகார்களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் செவிமடுக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சில நாய்களே ஆபத்துக்கு உரியவையாக மாறுகின்றன.
அவற்றை நிரந்தரமாக அப்புறப்படுத்தி வளர்ப்பதற்கு அரசிடம் பெருமளவுக்கு இடவசதி தேவைப்படும். தெருநாய்களைக் கையாள்வதில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. பணியாளர்கள் நாய்க்கடிக்கு உள்ளாகும்போது அவர்களுக்கான சிகிச்சையில் சமரசம் இருக்கக் கூடாது.
கட்டமைப்பு நிச்சயமானதாக இருந்தால் தான், உள்ளாட்சி நிர்வாகங்களும் ஈடுபாட்டோடு நடவடிக்கையில் இறங்க முடியும். தவிர்க்கவே முடியாத சூழலில், ஆபத்தான நாய்களைக் கொல்ல வேண்டும் என்கிற கோரிக்கை புறக்கணிக்கத்தகுந்தது அல்ல. 2017இல் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், “நாய்களுக்கும் வாழ உரிமை இருக்கிறது. ஆனால், சமநிலை அவசியமாகிற சூழலில், நாய்களைக் கொல்லலாம்” எனக் கூறியுள்ளது. இறைச்சிக் கடைகள், உணவகங்கள் போன்றவை குப்பை கொட்டுவதற்குக் கூடுதலாகச் சில வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் நினைத்த இடங்களில் உணவுக்கழிவைக் கொட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். சாலைப்பாதுகாப்பு போல, நாய்களை எதிர்கொள்ளவும் மக்கள் கற்பிக்கப்பட வேண்டும் என விலங்கு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வாகனங்களைத் துரத்தும் நாய்களைப் போல, வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நாய்கள் குறித்த புள்ளிவிவரமும் உண்டு. தெருக்களில் வாகனங்கள் நிதானமான வேகத்தில் செல்வது, அதிக ஓசை எழுப்புவதைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மனிதர்களுக்கு எதிராக நாய்கள் தூண்டப்படுவதைத் தவிர்க்கும். மனிதர்கள் மனிதர்களாக நடந்துகொள்வது மிகவும் முக்கியமானது.