வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: வழக்கு நிலுவை என பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி
வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: வழக்கு நிலுவை என பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி
வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் 5 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருவதாக அமர்வின் உறுப்பினர்கள் நேற்று அதிருப்தி தெரிவித்தனர்.
வேளச்சேரி ஏரியில் விடப்படும் கழிவுநீரால் ஏரி மாசுபட்டு இருப்பதாக கடந்த 2020-ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. வேளச்சேரி ஏரி தொடர்பாக தனிநபர் தொடர்ந்து வழக்கும் இதனுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வழக்கு தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர், நீர்வள ஆதாரத்துறை அதிகாரி உள்ளிட்டோரை கொண்ட கூட்டுக்குழுவை அமைத்து ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர் கூட்டுக்குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் "வேளச்சேரி ஏரியின் உண்மையான பரப்பளவு 107.48 ஹெக்டேர். அரசுத் துறைகளுக்கு ஏரி பகுதிகள் ஒதுக்கப்பட்டதால் 22.4 ஹெக்டேராக குறைந்துவிட்டது. ஏரியின் நீர் கொள்திறன் 4-ல் ஒரு பங்காக, குறைந்துவிட்டது. பல்வேறு வடிகால்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் ஏரியில் விடப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், "வேளச்சேரி ஏரியை சீரமைப்பது தொடர்பாக தலைமைச் செயலர் தலைமையில் கடந்த செப்.10-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சிஎம்டிஏ சார்பில் ரூ.23 கோடியே 50 லட்சத்தில் ஆழப்படுத்தி சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, "வேளச்சேரி ஏரியில் 962 ஆக்கிரமிப்பு வீடுகள், 54 வணிக பயன்பாட்டு கட்டிடங்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்களுக்கு மாற்று இடங்கள் வழங்க பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு, பயோமெட்ரிக் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்று இடம் வழங்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இந்த வழக்கு 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என அமர்வின் உறுப்பினர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து அடுத்த விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்வதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் உறுதியளித்ததை தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜன.30-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.