சுண்ணாம்புகுளம் சுற்றுவட்டார பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக 11 கிலோ வாட் மின் இயக்கி துவக்க விழா
கும்மிடிப்பூண்டி,நவ.21. கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராமங்களின் பயன்பாட்டிற்காக 59லட்சத்து 96ஆயிரத்து 350ரூபாய் மதிப்பீட்டில் 11கிலோ வாட் மதிப்புள்ள புதிய மின் இயக்கியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் , ஓபசமுத்திரம், தலையாரிப்பாளையம், துராப்பள்ளம், நரசிங்கபுரம், மூலரோடு, சென்னாவரம், எளாவூர் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களுக்கு எளாவூர் பகுதிக்கான 11கிலோ வாட் மின் இயக்கி மூலம் மின் விநியோகம் செய்யப்படும். இதன் காரணமாக சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக தொடர் மின் தடை ஏற்படுவது வழக்கமாக இருந்தது.
இதனால் அவதிப்பட்ட அப்பகுதி மக்கள் இந்த தொடர் மின் தடை பிரச்சனையை தீர்க்க கோரி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனிடம் மனு அளித்தனர். தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசிய எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியதோடு, இந்த பிரச்சனையை தீர்க்க கோரி மின்சார துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பல கட்ட முயற்சிகளின் விளைவாக சுண்ணாம்புகுளம் சுற்று வட்டார பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக 11கிலோ வாட் மின் இயக்கியை அமைக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து மின் இயக்கியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்றது.
நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி புதிய மின் இயக்கியை துவக்கி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்பணித்தார். இந்த விழாவில் கோட்ட மின்வாரிய கோட்ட பொறியாளர் பாண்டியன்,உதவி கோட்ட பொறியாளர் கதிரவன் உதவி பொறியாளர் கண்ணன், ஓய்வு பெற்ற உதவி கோட்ட பொறியாளர் ஜெயபாலன் உள்ளிட்ட மின் வாரிய அதிகாரிகள் மற்றும் சுண்ணாம்புகுளம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.ரவி, பெத்திக்குப்பம் ஊராட்சி தலைவர் ஜீவா செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பேசும் போது மின்வாரிய அதிகாரிகள் இந்த பணியை சிறப்பாக செய்த ஒப்பந்ததாரர் பிரதாப் ஆகியோரை பாராட்டியவர், இந்த பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற முன்னாள் உதவி கோட்ட பொறியாளர் ஜெயபாலனை வாழ்த்தி அவருக்கு நினைவு பரிசளித்தார்.
மேலும் பேசியவர் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் இதுவரை 110மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கெனவே தேர்வாய் கண்டிகையில் 11கிலோ வாட் மின் இயக்கி அமைக்கப்பட்டதாக தெரிவித்தவர், மாதர்பாக்கம் சுற்று வட்டாரத்தில் மின் தடையை போக்கும் வகையில் அங்கும் 110கிலோவாட் மின் திறனுள்ள துணை மின் நிலையம் அமைக்கும் திட்டமும் விரைவில் துவக்கப்பட உள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் திமுக மாவட்ட துணை செயலாளர் எம்.எல்.ரவி, மாவட்ட பொருளாளர் எஸ்.ரமேஷ், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், நகர திமுக செயலாளர் அறிவழகன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், பெத்திக்குப்பம் ஊராட்சி துணை தலைவர் குணசேகரன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துணை தலைவர் கேசவன், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், அரசு வழக்கறிஞர் பல்லவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.