logo

ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

கும்மிடிப்பூண்டி,நவ.5. கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரத்தில் பொதுப்பணி துறை பராமரிப்பில் உள்ள பெரியஏரியின் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் கால அவகாசம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரத்தில் 63ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணி துறை பராமரிப்பில் உள்ள இந்த ஏரியின் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் 6ஏக்கர் நிலத்தை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனுபவித்து காலம் காலமாக ஒரு போக விவசாயமாக நெல் பயிரிட்டு வந்தனர்.

இந்த நிலையில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் இந்த நில ஆக்கிரமிப்புகளை திங்களன்று போலீஸார் பாதுகாப்போடும், கிராம நிர்வாக அலுவலர் ராஜா முன்னிலையிலும் அகற்ற வந்தனர். அப்போது பொதுப்பணி துறை உதவி பொறியாளர் கண்ணனிடம் அப்பகுதி விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, நெற் பயிர் விதைத்து 1மாதம் கடந்து 60நாளில் நெல்பயிர் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் , அறுவடைக்கு பிறகு மேற்கண்ட நிலத்தை பொதுப்பணி துறையிடம் நாங்களே ஒப்படைக்கிறோம் என்றனர்.

அதற்கு அதிகாரிகள் ஒப்புக் கொள்ளாத சூழலில் விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது சராமரியாக குற்றச்சாட்டுகளை வைத்தனர் . மேற்கண்ட 63ஏக்கர் ஏரி 50வருடங்களாக தூர் வாரப்படாமல், குட்டை போல காட்சி அளிக்கும் நிலையில், அதனை சீரமைக்க விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதனை கண்டுக் கொள்ளவில்லை என்றும், மேற்கண்ட ஏரியின் வரத்து கால்வாயை ஆக்கிரமிதது தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆக்கிரமிப்பை பொதுப்பணித்துறை கண்டுக்கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

அவ்வாறே பெரியஓபுளாபுரத்தில் 7ஏக்கர் ஓடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஒரு தரப்பிற்கு ஆதரவாக நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்ற மட்டும் அதிகாரிகள் தீவிரம் காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

இதனை தொடர்ந்து போலீஸார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், அறுவடை காலத்திற்கு பிறகு மேற்கண்ட ஆக்கிரமிப்பு நிலத்தை பொதுப்பணித்துறையினர் கையகப்படுத்திக் கொள்ளலாம் என விவசாயிகள் கையொப்பமிட்டு
எழுதி தந்த நிலையில், பெரியஓபுளாபுரம் ஊராட்சியில் உள்ள வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, ஓடை ஆக்கிரமிப்பு உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதோடு, பெரியஏரியை தூர்வாரி கலங்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

5
3447 views