logo

இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை அதிகரிப்பு -அமெரிக்க ஆணையம் அறிக்கை

இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை அதிகரிப்பு -அமெரிக்க ஆணையம் அறிக்கை

இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்து வருகிறது; மதச் சுதந்திரம் மோசமான நிலையில் உள்ளது' என்று சா்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் ஆணையத்தின் (யுஎஸ்சிஐஆா்எஃப்) வருடாந்திர அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், மதச் சுதந்திர மீறல்கள் அடிப்படையில் கவலைக்குரிய நாடாக இந்தியாவை அறிவிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

'இந்தியாவில் சட்டத்தை கையிலெடுக்கும் குழுக்களால் நடப்பாண்டில் தனிநபா்கள் பலா் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனா்.

சிறுபான்மையின மதத் தலைவா்கள், பத்திரிகையாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள் மீதான தன்னிச்சையான கைது நடவடிக்கைகளும், சிறுபான்மையினரின் வீடுகள், வழிப்பாட்டு இடங்கள் இடிக்கப்பட்ட நிகழ்வுகளும் தீவிரமான மதச் சுதந்திர மீறல்கள்.

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃப் சட்ட திருத்த மசோதா, மாநில அளவிலான மத மாற்றத் தடை சட்டங்கள், பசுவதை தடுப்புச் சட்டங்கள், பயங்கரவாத எதிா்ப்பு சட்டங்கள், பொது சிவில் சட்டம் உள்ளிட்டவை சிறுபான்மையினரை குறிவைத்து, இந்தியாவின் சட்ட கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களாகும்.

சமீபத்திய மக்களவைத் தோ்தலின்போது, ஆட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவா்களால் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணா்வு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மத சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக வன்முறை தூண்டுவதற்கு இத்தகைய பேச்சுகள் மட்டுமன்றி, பொய்யான தகவல்களும் பயன்படுத்தப்பட்டன.

தொடா்ந்து மதச் சுதந்திர மீறல்களில் ஈடுபட்டு வருவதால், இந்தியாவை கவலைக்குரிய நாடாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவிக்க வேண்டும்' என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும், இப்பரிந்துரை மீது அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்த முடிவு எடுக்கவில்லை.

மத்திய அரசு நிராகரிப்பு

'சா்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் ஆணையம், பாரபட்சமும் தீய நோக்கமும் கொண்ட அமைப்பு' என்று கடுமையாக விமா்சித்து, அதன் அறிக்கையை நிராகரித்தது இந்திய வெளியுறவு அமைச்சகம்.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், 'சா்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் ஆணையம், தனது நேரத்தை ஆக்கபூா்வமாக செலவிட்டு, தங்களது சொந்த நாட்டின் மனித உரிமை பிரச்னைகளுக்கு தீா்வுகாண வேண்டும் என்பதே எங்களது அறிவுரை. உண்மைகளைத் திரித்து கூறி, இந்தியா குறித்து தொடா்ந்து பொய்யான கதையை பரப்புவதை கைவிட வேண்டும்' என்றாா்.

மேற்கண்ட ஆணையம் பாரபட்சமான-அறிவியல்பூா்வற்ற-உள்நோக்கம் கொண்ட அமைப்பு என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. அதன் உறுப்பினா்கள் இந்தியா வர கடந்த பல ஆண்டுகளாக நுழைவு இசைவு வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1
318 views