logo

"தப்புமா சென்னை.." அடித்து துவைக்க போகுது பருவமழை.. ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு.. பறந்த ரிப்போர்ட்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் புயல், கனமழையால் சென்னை மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற பாதிப்புகள் வரும் காலத்தில் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்படி வெள்ளத்தைத் தடுப்பது குறித்து முக்கிய ரிப்போர்ட் ஒன்று சென்னை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கடந்தாண்டு மிக்ஜாம் புயல் காரணமாகக் கொட்டிய கனமழையால் சென்னை மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் திடீரென கொட்டும் இதுபோன்ற மழையால் சென்னை மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாகச் சென்னை புறநகர்ப்பகுதிகள் தான் இதில் மோசமாகப்பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போராடி வருகின்றன. இதற்கிடையே நகரில் என்ன பிரச்சினை உள்ளது, அதை நிரந்தரமாகச் சரி செய்வது எப்படி என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் இறங்கியுள்ளன.

பருவமழை: இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் வழக்கமான அளவை காட்டிலும் கூடுதல் மழை சென்னையில் பெய்துள்ளது. வழக்கமாக 305.5 மிமீ மழை பெய்யும் நிலையில், இந்தாண்டு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 459.7 மிமீ மழை பெய்துள்ளது. ஆனால், தென்மேற்கு பருவமழை என்பது எப்போதும் பரவலாக இருக்கும். இது ஓரிரு நாட்களில் கொட்டும் கனமழையாக இருக்காது பரவலாகப் பெய்யும். இதனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் மாநகராட்சி சமாளித்துவிட்டது.

ஆனால் வடகிழக்கு பருவமழை என்பதும் மொத்தமாக வேறு. இதில் குறுகிய காலத்தில் கனமழை கொட்டும். எனவே, சென்னையில் வடகிழக்கு பருவமழையைச் சமாளிப்பது தான் சவாலானது. கடந்த காலங்களில் கழிவுநீர் பாதைகளில் ஏற்பட்ட அடைப்பு தான் முக்கிய காரணமாக இருந்தது. இந்த முறை மீண்டும் அதுபோல நடக்காமல் இருக்க மாநகராட்சி முழுவதும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரிப்போர்ட்: இந்த தன்னார்வலர்கள் மிக்ஜாம் புயல் சமயத்தில் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். எந்த பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருக்கிறது, இதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து விரிவான ரிப்போர்ட்டையும் சமர்ப்பித்துள்ளனர். தென்சென்னையை விட வடசென்னையில் தான் மழை தேங்கி இருக்கிறது. உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த ரிப்போர்ட்டில், "சென்னையில் கடந்த 2015 டிசம்பர் மாதம் பெய்த மழையைக் காட்டிலும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அதிக மழை பெய்துள்ளது. கனமழையுடன் விரைவான நகரமயமாக்கல், போதிய மழைநீர் வடிகால்கள் இல்லாதது, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ள பாதிப்பு மீண்டும் மீண்டும் நடக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

காரணங்கள்: மோசமான நகர்ப்புற திட்டமிடலே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது. போதிய மழைநீர் வடிகால் இல்லாதது, மோசமான கழிவு மேலாண்மை சிஸ்டம் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஆகியவை முக்கிய பிரச்சினைகளாகக் கூறப்பட்டுள்ளது. வியாசர்பாடி, புளியந்தோப்பு, திடீர் நகர், சடையங்குப்பம், பர்மா நகர், கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், ஜெயலலிதா நகர்,TKP நகர் ஆகிய பகுதிகளில் தான் பாதிப்பு மிக மோசமாக இருந்துள்ளது.

வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது ஒரு பிரச்சினை என்றால் அதில் கழிவுநீரும் கலந்து விட்டதால் காய்ச்சல், தோல் நோய் ஆகியவையும் ஏற்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் போன்றவையும். மேலும் மழைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை வைத்து சில வணிகர்கள் மிக அதிக விலைக்கும் பொருட்களை விற்றுள்ளனர்.

பணிகள் முடியவில்லை: அதாவது போதிய மழைநீர் வடிகால்கள் இல்லாதது, வடிவமைப்பில் உள்ள சிக்கல், பராமரிப்பின்மை, மிஸ்ஸான இணைப்புகள் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே இரண்டு நீர்த்தேக்கங்களை அமைக்கப் பரிந்துரை அளிக்கப்பட்ட போதிலும், அது இன்னும் அமைக்கப்படவில்லை. அது பாதிப்பை மோசமாக்கியிருக்கிறது. மேலும், கொசஸ்தலையாற்றின் குறுக்கே பணிகள் முழுமை அடையாதது ஆகியவையும் சென்னையில் அடிக்கடி பேரிடர் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.

தீர்வுகள்: மேலும், இதற்குக் குறுகிய கால தீர்வு மற்றும் நீண்ட கால தீர்வுகளும் முன்மொழியப்பட்டுள்ளது. குறுகிய காலத் தீர்வு என்னவென்றால் தன்னார்வலர்களை அதிகளவில் நியமித்து வாக்கி-டாக்கி மூலம் நிலைமையைக் கண்காணித்து உடனுக்கு உடன் நடவடிக்கை எடுப்பது. ரிமோட் சென்சிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் எந்த பகுதிகள் பாதிக்கப்படும் என்பதைக் கண்டறிந்து முன்கூட்டியே மக்களை வெளியேற்றுவது, மோட்டர்களை தயார் நிலையில் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பருவ மழைக்கு முன்பு பக்கிங்காம் கால்வாய் அருகே தடுப்பு அமைப்பது. அதிக குதிரை திறன் கொண்ட மின்மோட்டர்கள் வைப்பது. பாதிக்கப்படும் பகுதியில் உணவுகள் சமைத்து அந்த வட்டத்தில் வழங்குவது. அப்பகுதி மக்களை விரைந்து வெளியேற்ற படகுகள் தயார் நிலையில் வைப்பது. விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் அந்த பகுதியில் கண்காணிப்பது. பாதிக்கப்பட்ட மக்களை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள செய்தால் நன்றாக இருக்கும் என்று பாதிக்கப்பட்ட நபர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

இதில் சில நீண்ட கால திட்டங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதலில் திட்டமிடப்படாத நகரமயமாக்கலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு மக்கள் அதிகம் வருவதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் தொழில் மண்டலங்களை விரிவுபடுத்த வேண்டும். நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல நீண்ட கால தீர்வுகளும் முன்மொழியப்பட்டுள்ளன. இதைப் பின்பற்றினால் இனி சென்னையில் நிச்சயம் வெள்ளம் ஏற்படாது.

32
807 views