logo

30 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்கண்டேயர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

தரங்கம்பாடி அருகே பழமை வாய்ந்த மருத்துவதி அம்பிகா சமேத மிருகண்டேஸ்வர சுவாமி, மார்க்கண்டேயர் கோவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா டி.மணல்மேடு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த மருத்துவதி அம்பிகா சமேத மிருகண்டேஸ்வர சுவாமி, மார்க்கண்டேயர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், மிருகண்டு மகரிஷி பிள்ளை பேறு வேண்டி சிவபெருமானை வழிபட்ட திருத்தலமாகவும் போற்றப்படுகிறது. மிருகண்ட மகரிஷி நல்ல புத்திர பாக்கியம் ஏற்பட வெகு காலம் சிவ பூஜை செய்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. அப்படி சிவபூஜை செய்யப்பட்ட ஆலயமே டி.மணல்மேடு கிராமத்தில் அமைந்திருக்கக்கூடிய மிருகண்டேஸ்வர சுவாமி ஆலயமாகும். இக்கோவிலில் மார்க்கண்டேய பெருமான் மூலவருக்கு தனி சன்னதியும் அமர்ந்திருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் கோவிலுக்கு வந்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பதும், வேண்டிய பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதும் ஐதீகம். பல்வேறு சிறப்புகள் உடைய இக்கோவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று நிறைவடைந்ததை அடுத்து மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கடந்த 24 ஆம் தேதி தேவதா அனுக்ஞை, யஜமான சங்கல்பம் செய்து கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து யாக குண்டத்தில் சிவாச்சாரியார்கள் கொண்டு கடந்த 28 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று ஆறாம் கால யாக சாலை பூஜை நிறைவுற்று மகாபூர்ணஹூதி செய்யட்டு, மகாதீபாரதனை காட்டப்பட்டு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பனர்கள் வேதங்கள் ஓத கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

0
2267 views