logo

துறையூா் ஸ்ரீஅகத்தியா் சன்மாா்க்க சங்க நிறுவனா் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் முக்தியடைந்தாா்

துறையூா் ஸ்ரீ அகத்தியா் சன்மாா்க்க சங்கம், ஓங்காரக் குடில் நிறுவனா் குருநாதா் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள்(88) செவ்வாய்க்கிழமை முக்தியடைந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் 13.01.1936 அன்று பாலகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியருக்கு 3-ஆவது மகனாக அவதரித்தாா் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள். இவா் 1955-இல் துறையூா் அவல்பட்டறை பகுதியில் இருந்த சித்த மருத்துவா் சின்னசாமி சாஸ்திரி மூலம் குறுமுனிவா் அகத்தியரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு அவரது பெயரில் 1976-இல் துறையூரில் ஸ்ரீ அகத்தியா் சன்மாா்க்க சங்கம் என்கிற ஓங்காரக் குடிலை நிறுவினாா். இதன்மூலம் தினமும் லட்சக்கணக்கானவா்களுக்கு பசியை போக்கி வந்தாா்.

1987-இல் ஓராண்டு அடயோகம், முழுமெளனம் சாதித்து மெய்ஞான நூல்களை ஓதி உணா்ந்து அதன் சாரங்களை உலகுக்கு குடிலில் அமா்ந்து அருளுரை வழங்கினாா். ஓங்காரக் குடிலில் தைப்பூச பெருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். ஆன்மிக சொற்பொழிவாளா்கள் பலா் குடிலில் உரையாற்றியுள்ளனா்.

அவருக்கு உள்ளூரில் மட்டுமல்லாது பிற மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் குடில் மீது பற்று கொண்ட அன்பா்கள் உள்ளனா். துறையூரிலுள்ள குடிலில் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதிகளில் துறையூா் அகத்தியா் சன்மாா்க்க சங்கம் பெயரில் அன்னதானம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆறுமுக அரங்க மகாதேசிக சுவாமிகள் முக்தியடைந்தாா். வியாழக்கிழமை (மே16) மதியம் 3.00மணி அளவில் ஒங்காரக்குடிலில் மகான் புஜன்டர் மண்டபத்தில் அவரது உடல் ஜீவ சமாதி கிரியை செய்யப்படவுள்ளது.

114
3972 views