logo

கச்சத்தீவு: இந்த 300 அடி நிலம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஏன் முக்கியமானது?

கச்சத்தீவு குறித்த சர்ச்சை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் எல்லை பிரிக்கப்படும்போது அங்குள்ள கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.1974-இல் நடந்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் ஒரு மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கச்சத்தீவு குறித்தும் இந்த சர்ச்சை குறித்தும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களைப் பார்க்கலாம்.

கச்சத்தீவு எங்கே இருக்கிறது?

கச்சத்தீவு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் நீரிணை பகுதியில் அமைந்திருக்கிறது. இலங்கையின் நெடுந்தீவிலிருந்து தென்மேற்கு திசையில் 10.5 மைல் தொலைவிலும் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் இந்தத் தீவு அமைந்திருக்கிறது.ஒரு மைல் நீளம் கொண்ட இந்தத் தீவின் அதிகபட்ச அகலம் 300 அடி. இந்தத் தீவின் மொத்தப் பரப்பளவு 285.2 ஏக்கர். இங்கே மனிதர்கள் யாரும் வசிப்பதில்லை. இங்கு புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் இந்தத் தேவாலயத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இதற்கு இலங்கையில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் பக்தர்கள் செல்வது வழக்கம். 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் இந்த ஆலயத்தைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.

'தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் இந்தக் கோவிலில் பூசைவைப்பார்' என ராமநாதபுரம் கெஸட்டியர் குறிப்பிடுறது. 1983-இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் வெடித்த பிறகு, இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் செல்வது தடைபட்டது. உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு 2012-ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் திருவிழா நடந்துவருகிறது.இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பிரிட்டிஷார் இந்தத் தீவை, வெடிகுண்டுகளை வெடித்துப் பயிற்சி செய்யப் பயன்படுத்தினார்கள்.பாக் நீரிணை பகுதியின் முக்கியத்துவம் என்ன?

பாக் நீரிணை என்பது இலங்கையின் வடக்குக் கடற்கரைப் பகுதியையும் இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியையும் இணைக்கும் 22 மைல் அகலமுள்ள ஒரு நீர்ப்பரப்பு. 1755-லிருந்து 1763 வரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ராபர்ட் பாக் என்பவரின் பெயர் இந்த நீரிணைக்குச் சூட்டப்பட்டுள்ளது.

இதை ஒரு கடல் பகுதி என்பதைவிட, நிலத்தில் கடல் உட்புகுந்த பகுதியாகவே கருதவேண்டும். இந்தப் பகுதியில் கடல் ஆழமில்லாமல் இருக்கும். பாக் நீரிணையையும் மன்னார் வளைகுடாவையும் பாம்பன் நீரிணையால் இணைக்கப்படுகின்றன. இந்த பாம்பன் நீரிணைதான் ராமேஸ்வரத்தை பிரதான தமிழக நிலப்பரப்பிலிருந்து பிரிக்கிறது.கச்சத்தீவு பிரச்னை எப்போது துவங்கியது?

கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை 1920-களிலேயே துவங்கிவிட்டது. பாக் நீரிணை - மன்னார் வளைகுடா பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்காக 1921 அக்டோபர் 24-ஆம் தேதி கொழும்பு நகரில் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சுங்க வரிக்கான முதன்மை கலெக்டர் ஹார்ஸ்பர்க், கச்சத் தீவு இலங்கைக்கு வரும்படி எல்லையை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநாட்டை நிறுத்திவிடலாம் என்று சொன்னார். கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தம் என்பதற்கு ஆதாரமாக, இந்திய அரசுடனான ஒரு கடிதப் போக்குவரத்தைச் சுட்டிக்காட்டினார்.

இதை ஏற்காத இந்தியக் குழு, வேண்டுமானால் அந்தப் பகுதியின் மீன்பிடி உரிமையை மட்டும் தருவதாகச் சொன்னது. அதன்படி கச்சத்தீவிலிருந்து மேற்கே மூன்று மைல் வரை இலங்கைக்கு மீன் பிடிக்கும் உரிமை இருப்பதாக ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது. சங்கு அதிகமுள்ள பகுதி மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் வருவதால், மீன் பிடி உரிமையை விட்டுக்கொடுக்கலாம் என பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள் நினைத்து, இப்படிச் செய்தார்கள். ஆனால், இந்த ஒப்பந்தத்தை காலனி அலுவலகம் ஏற்கவில்லை. ஆகவே சட்டரீதியாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை. இருந்தபோதும் பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டதால், கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தம் என இலங்கை வாதிட ஆரம்பித்தது.இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு என்ன நடந்தது?

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தப் பிரச்னை அவ்வப்போது எழுப்பப்பட்டது. 1949-இல் பாக் நீரிணை பகுதியில் இந்தியா கடற்படை ஒத்திகையை நடத்த விரும்பியது. கச்சத்தீவை குண்டு வீசுவதற்கான இலக்காக வைத்துக்கொள்ள விரும்பியது. ஆனால், அந்தப் பகுதி இலங்கைக்குச் சொந்தமானது என்பதால் தங்களது அனுமதியைப் பெற வேண்டுமென இலங்கை கூறியது.

இதற்குப் பிறகு, 1956-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது விமானப் படை குண்டு வீசும் பயிற்சிக்காக கச்சத்தீவைப்பயன்படுத்தப் போவதாக இலங்கை அரசு இந்திய அரசிடம் முன்கூட்டியே தெரிவித்தது. ஆனால், அந்தத் தீவின் உரிமை குறித்த விவகாரம் தெளிவில்லாமல் இருப்பதால் ஒத்திகையை ஒத்திப்போடும்படி இலங்கை அரசிடம் இந்திய அரசு கேட்டுக்கொண்டது. இதற்குப் பதிலளித்த இலங்கை அரசு, கச்சத்தீவு இலங்கையின் பிரிக்க முடியாத பகுதி என்றும் விமானத் தாக்குதல் ஒத்திகையைப் பொறுத்தவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லையென்றும் தெரிவித்தது.

1956-இல் தனது கடல் எல்லையானது நிலப்பரப்பிலிருந்து 3 மைல் என்பதில் இருந்து ஆறு கடல் மைல்களாக மாற்றப்பட்டிருப்பதாக இந்தியா அறிவித்தது. 1957-இல் தனது கடற்பரப்பிலிருந்து 100 கடல் மைல் பரப்புக்கு தனது கட்டுப்பாடு இருக்கும் என்றது இந்தியா. 1957-இல் இலங்கையும் தனது கடல் எல்லை 6 நாட்டிகல் மைல் வரை இருக்கும் என்றும் 100 கடல் மைல் பரப்புக்கு தனது கட்டுப்பாடு இருக்கும் என்றும் அறிவித்தது. 1967-இல் தனது கடல் எல்லையை இந்தியா 12 கடல் மைல்களாக அதிகரித்தது. 1970-இல் இலங்கையும் தனது எல்லையை 12 கடல் மைல் தொலைவுக்கு அதிகரித்தது.

கச்சத்தீவு மீதான உரிமையை கைவிட இந்தியா முடிவுசெய்தது எப்போது?

1973 ஏப்ரலில் இந்திரா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளுக்கு இடையில் கூட்டங்கள் நடந்தன. இந்தியா - இலங்கை உறவைத் தீர்மானிக்கும் அனைத்து விஷயங்களும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

1964-ஆம் வருட சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தில் விட்டுப்போன நாடற்ற ஒன்றரை லட்சம் பேரின் குடியுரிமை விவகாரம், இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டவர்களை இந்தியாவுக்கு அழைத்துக்கொள்வது, பாக் நீரிணையில் கடல் எல்லையை வரையறுப்பது, கச்சத்தீவு மீதான உரிமை ஆகியவை இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன. இந்தக் கட்டத்தில்தான் இந்தியா தனது கச்சத்தீவு மீதான உரிமையைக் கைவிட முடிவுசெய்ததாகத் தெரிகிறது.

முதல் கச்சத்தீவு ஒப்பந்தம் சொல்வது என்ன?

இந்த ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி கையெழுத்தானது. இதில் பாக் நீரிணைப் பகுதியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன. கச்சத்தீவு இலங்கைக்குச் செல்லும் வகையில் எல்லை வரையறுக்கப்பட்டது.

இருந்தபோதும், இந்த ஒப்பந்தத்தின் 5-வது ஷரத்து, இந்திய மீனவர்களும் அந்தோணியார் கோவிலுக்கு வரும் பக்தர்களும் வழக்கம்போல அந்தப் பகுதிக்கு வரலாம் என்றும் இதற்கென பயண ஆவணங்கள் தேவையில்லையென்றும் கூறியது.

6-வது ஷரத்தின்படி, இந்திய, இலங்கை மீனவர்கள் எல்லை கட்டுப்பாடின்றி இரு நாடுகளின் கடற்பகுதிகளிலும் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறியது. இந்த ஒப்பந்தத்தில் இந்திரா காந்தியும் சிறிமாவோ பண்டாரநாயகவும் கையெழுத்திட்டனர்.இரண்டாவது ஒப்பந்தம் சொல்வதென்ன?

கச்சத்தீவு தொடர்பான இரண்டாவது ஒப்பந்தம் 1976-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் மன்னார் வளைகுடா பகுதியிலும் வங்காள விரிகுடா பகுதியிலும் எல்லைகளை வரையறுத்தது. இந்த ஒப்பந்தம் கடல் எல்லைகளை வரையறுத்துக் குறிப்பிட்டதோடு, இரு நாடுகளும் தத்தம் கடற்பகுதியில் இறையாண்மை உடையவர்கள் என்று குறிப்பிட்டது.

யாத்ரீகர்களின் உரிமை குறித்தோ, மீனவர்களின் உரிமை குறித்தோ அதில் எதுவும் குறிப்பிடவில்லை. இதன் மூலம் 1974-இல் வழங்கப்பட்டிருந்த சலுகைகள், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இல்லாமல் ஆக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலர் கேவல் சிங்கும் இலங்கையின் சார்பில் அந்நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புச் செயலரான டபிள்யு.டி. ஜெயசிங்கேவும் கையெழுத்திட்டனர்.

மீனவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகள் என்ன?

இந்த இரு ஒப்பந்தங்களும் கையெழுத்தான பிறகு, நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இரு தரப்பு மீனவர்களும் எல்லாப் பகுதியிலும் மீன் பிடித்து வந்தனர்.

அதேபோல, கச்சத்தீவுக்குச் சென்ற யாத்ரீகர்களும் தடுக்கப்படவில்லை. ஆனால், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது, சுடப்படுவது, படகுகள் கைப்பற்றப்படுவது வழக்கமானது. இதையடுத்து இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

43
2004 views