மணவாளக்குறிச்சியில் ஊர் தலைவரை தாக்கிய இளைஞர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே மாவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(58). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். தவிர இவர் மாவிளை ஊர் தலைவராகவும் இருந்து வருகிறார். அவரது ஊரை சேர்ந்த இளைஞர்கள் ஆகாஷ்(22), தனுஷ்(21)ஆகியோர் பைக்கில் அதிக சப்தம் வைத்து பைக்கை அதிவேகமாக ஓட்டி செல்வார்களாம். இதனை சுப்ரமணியன் கண்டித்துள்ளார். இதனால் இளைஞர்கள் சுப்ரமணியன் மீது முன்விரோதம் கொண்டனர். இந்நிலையில் சம்பவத்தன்று சுப்ரமணியன் வீட்டு முன் நிற்கும் போது அங்கு வந்த ஆகாஷ், தனுஷ மற்றும் அம்மாண்டிவிளையை சேர்ந்த ராஜா(32), கீயூமன்(25)மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் சேர்ந்து கம்பு மற்றும் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் படுகாயமடைந்த சுப்ரமணியன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறிப்பாக மணவாளக்குறிச்சி ஆகாஷ், தனுஷ், ராஜா உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.