logo

ஆசிரியர் மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: சமூக ஜனநாயக இயக்கங்கள் டி.ஜி.பி-யிடம் மனு!


சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வெ.அன்பரசன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தமிழ் மீனவர் வேங்கைகள் பொருளாளர் பா.பெருமாள், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைமை நிலையச் செயலாளர் எம்.சரத்பாஷா, தொகுதி தலைவர் நூ.ஜாவித் மியாம், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், இயற்கை மற்றும் கலாச்சாரப் புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி பொதுச்செயலாளர் கி.தாமரைகண்ணன் ஆகியோர் இன்று (21.03.2024) டி.ஜி.பி, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கிருஷ்ணசாமி 9ஆவது வகுப்புப் படிக்கும் மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக அம்மாணவியின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் குற்றமிழைத்த ஆசிரியர் கிருஷ்ணசாமியை பணியிடை நீக்கம் செய்தனர்.

இதன்பின்னர், நெட்டப்பாக்கம் காவல்நிலையப் போலீசார் பள்ளி தலைமையாசிரிடம் புகார் பெற்று ஆசிரியர் கிருஷ்ணசாமி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், நெட்டப்பாக்கம் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரைக் கைது செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து விசாரித்த போது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் ஆசிரியர் கிருஷ்ணசாமி மீது குற்ற நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

போக்சோ சட்டப் பிரிவு 21-ன்படி சிறுமிகள் மீது பாலியல் குற்றம் நடந்தது பற்றி தகவல் தரவில்லை என்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதன்படி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்ய முடியும். எவர் ஒருவரின் விருப்படி அல்லாமல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுப்பது போலீசாரின் கடமையாகும். மேலும், போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மீதே நடவடிக்கை வரும் என்பதை எடுத்துச் சொல்லி அம்மாணவியிடம் வாக்குமூலம் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் குற்றமிழைத்த ஆசிரியர் கிருஷ்ணசாமி பணிபுரிந்த பல்வேறு பள்ளிகளில் பல மாணவிகளிடம் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், நெட்டப்பாக்கம் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கிருஷ்ணசாமியை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கின்றனர். நாங்கள் நெட்டப்பாக்கம் போலீசார் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்.

எனவே, ஆசிரியர் கிருஷ்ணசாமி மீதான போக்சோ வழக்குப் புலன்விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும். சிபிசிஐடி போலீசார் உடனடியாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கிருஷ்ணசாமியை கைது செய்ய வேண்டும். புலன்விசாரணையை விரைந்து முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

42
2612 views