logo

திருவள்ளூரில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்? சசிகாந்த் செந்தில் போட்டியிட வாய்ப்பு.. மெகா பிளான்

சென்னை:18 வரும் லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் சிட்டிங் எம்பி ஜெயக்குமாருக்கு பதில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்கலாம் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி என 40 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் 9 நாடாளுமன்ற தொகுதி + புதுச்சேரி என மொத்தம் 10 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது.

இருப்பினும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 நாடாளுமன்ற தொகுதிகள் எது? என்பது அடையாளம் காணப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் இறுதியாக இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பான ஒப்பந்தம் காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் இடையே கையெழுத்தானது.

அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை என 9 தொகுதிகள் தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட வெற்றி பெற்ற திருச்சி, ஆரணி தொகுதியும், தோல்வியடைந்த தேனி தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, நெல்லை தொகுதிகள் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பி மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது திருவள்ளூர் தொகுதி எம்பியான காங்கிரஸ் கட்சியின் டாக்டர் கே ஜெயக்குமார் உள்ளார். வரும் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்க காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என கூறப்படுகிறது.

மாறாக காங்கிரஸில் ஜெயக்குமாருக்கு பதில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகாந்த் செந்தில் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். அதன்பிறகு ஐஏஎஸ் பதவியை அவர் ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது அவர் அம்மாநில வார்ரூம் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

மேலும் மக்களின் மனநிலை குறித்து அறிந்து தேர்தல் வாக்குறுதி தயாரிப்புக்கும் அவர் உதவி செய்தார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற சசிகாந்த் செந்திலின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாகும். இத்தகைய சூழலில் தான் சசிகாந்த் செந்திலுக்கு வரும் லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

68
3909 views