logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!

அரசு வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு வழங்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

கேரளத்தின் சமூக நீதித்துறை, தற்போது உள்ள இடஒதுக்கீட்டு முறையில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு வழங்குமாறு, திட்ட அறிக்கை ஒன்றை மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்துள்ளது.

கேரள உயர் நீதிமன்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துமாறு அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றமும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இதே போன்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின்படி, மாநில அரசுப் பணியாளர் தேர்வில் தகுதி பெற்ற மூன்று திருநங்கைகளை அந்தந்தப் பிரிவுகளின் கீழ் நியமிக்கக் கூடுதல் பதவிகளை உருவாக்கியிருந்தது. முறையான இடஒதுக்கீட்டுக் கட்டமைப்பு செயல்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், முறையான இடஒதுக்கீட்டுக்கான திட்ட அறிக்கை மாநில அமைச்சரவையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என கேரள சமூக நீதித்துறை அமைச்சர் ஆர் பிந்து தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மூன்றாம் பாலினத்தவரின் முன்னேற்றத்துக்கு இது போன்ற திட்டங்கள் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0 views

Comment