logo

மூன்று சகோதரிகள் உயிரிழக்க செல்போன் மற்றும் கொரிய கலாசார மோகம் காரணமா? தந்தை பகிர்ந்த தகவல்

(இச்செய்தியில் தற்கொலை தொடர்பாக சில விவரங்கள் உள்ளன, அது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)
உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 18 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகள் உயிரிழந்தது தொழில்நுட்ப யுகத்தில் குழந்தைகளை வளர்ப்பது குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
காஸியாபாத்தின் ஷாலிமர் கார்டன் பகுதியில் நடந்த சம்பவம் பல நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது, இதுகுறித்து பல்வேறு விஷயங்கள் கூறப்படுகின்றன.
ஷாலிமர் கார்டன் பகுதியின் காவல் உதவி ஆணையர் குமார் சிங் செய்தியாளர்களிடம், "பிப்ரவரி 4ஆம் தேதி அதிகாலை 2:15 மணியளவில், திலா மோர் காவல்நிலையத்துக்குட்பட்ட பாரத் சிட்டி பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது." என்றார்.தகவல் கிடைத்ததும் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்றது. உயரமான கட்டடத்தில் இருந்து குதித்து அந்த மூன்று சிறுமிகளும் உயிரிழந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் லோனி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமிகள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை விசாரித்துவருகிறது." இதுகுறித்து காவல்துறை இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றாலும், அச்சிறுமிகளின் மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
டிரான்ஸ் ஹிண்டன் காஸியாபாத் துணை ஆணையர் நிமிஷ் பட்டீல் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், இச்சம்பவத்தை தற்கொலை வழக்காக போலீஸார் விசாரித்துவருவதாக தெரிவித்தார். துணை ஆணையர் நிமிஷ் பட்டீல் கூறுகையில், இந்த வழக்கில் காவல்துறை இன்னும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. அச்சிறுமிகளுக்கு மொபைல் போன் மற்றும் கொரிய கலாசாரம் மீதிருந்த ஆர்வமே இச்சம்பவத்திற்கு முக்கிய காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன" என்றார்.

0
77 views