
திருச்சியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் 3 கோடி ரூபாய் மதிப்பில் ஜல்லிக்கட்டு மைதானம்-துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்!
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு வருடமும் தை மாதம் பொங்கல் விழாவை தொடர்ந்து கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். திருச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டில்
திருச்சி, , மற்றும் திருச்சியை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் சுமார் 800க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும் கலந்து கொள்வது வழக்கம்.
ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் இங்கு கூடுவார்கள். இந்த வகையில் பெருமைப்பெற்ற இந்த ஜல்லிக்கட்டுக்காக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூர் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான அரசாணை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று 19-02-2025 தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இந்த மைதானத்தில் அலுவலகம், முக்கிய விருந்தினர் தங்குவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு வீரர்கள் உடை மாற்றுவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தில் இரண்டு பகுதிகளிலும் பார்வையாளர் அமர்வதற்கான பிரம்மாண்ட பார்வையாளர் மேடை அமைய உள்ளது. இதில் சுமார் 810 பேர் அமரும் வகையில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடற்பயிற்சி அரங்கம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைய உள்ளது. இப்பணிகள் அனைத்தும் 9மாதத்தில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் வருகை தந்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆள் உயரரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டது தொடர்ந்து இரு பக்கமும் ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்கள் அவை உறுப்பினர் திருச்சி என்.சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், கதிரவன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், அப்துல்சமது மற்றும் துறை அதிகாரிகள் கட்சியினர் என திரளாக கலந்து கொண்டனர்.